நேற்று, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்பல்-உடன் எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டார்.
நேற்று, மகாதிர் ‘ஏபிசி நியூஸ்’ நேர்காணலில், நஜிப் ஆஸ்திரேலியப் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்வார் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து, நேற்று மாலை அந்த இரு அரசாங்கத் தலைவர்களும் நட்புடன் கைக்குழுக்கிக் கொள்ளும் ஒரு புகைப்படத்தை நஜிப் தனது டுவிட்டரில் பதிவேற்றம் செய்தது, மகாதிரின் கூற்றை உண்மையாக்கியது.
“இன்று காலை, ஆஸ்திரேலியப் பிரதமரைச் (டர்ன்பல்) சந்தித்தது நல்லதாகப் போனது @டர்ன்பல்மால்க்கம்!
“ஆஸ்திரேலியா மலேசியாவுடன் ஒரு நெருக்கமான பங்காளியாக உள்ளது, நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக ஒத்துழைப்பு நல்கிக்கொள்வோம்,” என்று நஜிப் தெரிவித்தார்.
உலகின் பார்வையில் தனது நிலையை விரிவுபடுத்தி காட்ட, சர்வதேச தலைவர்களுடன் நஜிப் புகைப்படம் எடுத்துகொள்ள முயல்கிறார் என்று மகாதிர் நேற்று ஆஸ்திரேலிய ஊடகத்தின் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
ஆசியான்-ஆஸ்திரேலியா உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள நஜிப் சிட்னியில் இருக்கிறார்.
இந்த மாநாட்டில் நஜிப் தொடர்புடைய 1எம்டிபி ஊழல் பிரச்சினையை டர்ன்பல் வெளியிட வேண்டும் என்று, கடந்த வாரம் மகாதிர் கூறியதாக ‘தி ஆஸ்திரேலியா’ செய்தி வெளியிட்டிருந்தது.