குடியுரிமையற்ற குழந்தைகளுக்கு உதவ, நீண்ட கால திட்டம் தேவை, சுவாராம் வலியுறுத்து

மனித உரிமைகள் சார்ந்த அரசுசாரா அமைப்பான, மலேசிய மக்கள் குரல் (சுவாராம்), குடியுரிமை இல்லாத குழந்தைகள் பிரச்சனையைக் களைய, ஒரு நிலையான கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென புத்ராஜெயாவைக் கேட்டுக்கொண்டது.

குடியுரிமை இல்லாத குழந்தைகளின் பதிவுகளைத் துரிதப்படுத்த, அரசு சாரா நிறுவனங்களுடன் (என்.ஜி.ஓ.) இணைந்து பணியாற்றும்படி, தேசியப் பதிவு இலாகாவைக் (ஜெ.பி.என்) கேட்டுக்கொண்ட துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடியை, சுவாராம் நிர்வாக இயக்குநர் சிவன் துரைசாமி பாராட்டினார்.

எனினும், இந்த விஷயத்தைத் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். மலேசிய குடியுரிமை இல்லாததால், சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தும், உயர்நிலைப் பள்ளி மாணவி ரோய்ஷா அப்துல்லா பொது பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க முடியாது போனது. இதுபோன்ற பிரச்சனைகள் மக்களிடையே எழுந்த பிறகு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றார் அவர்.

ஜெ.பி.என். போன்ற அரசாங்க துறைகள், இந்தப் பிரச்சனையை நன்கு அறிந்த என்.ஜி.ஓ.கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் நீண்ட காலத்திற்கு முன்னமே ஆலோசனைகள் நடத்தியிருக்க வேண்டும் என்று சிவன் தெரிவித்தார்

14-ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும், வழங்கப்பட்ட இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 12-ல், சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் (லோயர்ஸ் ஃபோ லிபர்ட்டி), குடியுரிமைக்கு விண்ணப்பித்து ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட, 20 வயதான ரோய்ஷாவின் பிரச்சனையை வெளிச்சம் போட்டு காட்டினர்.

1997-ல், கிள்ளானில் பிறந்த ரோய்ஷாவின் தந்தை பற்றிய விவரங்கள் தெரியவில்லை, தாயார் வெளிநாட்டவர். ரோய்ஷாவைப் பாதுகாத்து வந்த அவரின் வளர்ப்புப் பெற்றோர்களும் காலமாகிவிட்டதாகத் தெரிகிறது.

உள்துறை அமைச்சரான ஜாஹிட், இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும், ரோய்ஷா உள்நாட்டுப் பல்கலைகழகத்தில் படிக்க உதவிகள் செய்ய வேண்டுமென பிகேஆர் மூத்தத் தலைவர் அன்வார் அன்றைய தினம் ஓர் அறிக்கை வாயிலாகக் கூறியிருந்தார்.

“ஜாஹிட் இந்தப் பிரச்சனைக்குப் பொறுப்பேற்க வேண்டும், பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேரத்தை செலவளிப்பதைவிட, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு அவர் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கடந்த வாரம், குடியுரிமையற்றக் குழந்தைகள் முறையான கல்வி மற்றும் சரியான ஆவணங்களைப் பெற, ஜே.பி.என். நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஜாஹிட் கூறியிருந்தார்.

அத்தகைய குழந்தைகளுக்கான பதிவுகளைத் துரிதப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க மாநிலக் கல்வி இலாகா இயக்குநர்களுக்கு தான் அதிகாரம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இத்தக் குழந்தைகளின் பெற்றோர்களில், பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் திருமணம் முடித்துக்கொண்டு, மலேசியாவில் தங்கள் திருமணங்களைச் சட்டப்பூர்வமாக பதிவு செய்யவில்லை என்று ஜாஹித் மேலும் தெரிவித்தார்.

“ஜே.பி.என். -ஐ குற்றம் சொல்லாதீர்கள். குழந்தைகள் சுத்தமானவர்கள் (அப்பாவிகள்). பெற்றோர்கள்தான் பிரச்சினைகளுக்குக் காரணமானவர்கள்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா மேற்கோளிட்டுள்ளது.