14வது பொதுத் தேர்தல் ஏப்ரல் நடுப்பகுதிக்கும் மே நடுப்பகுதிக்குமிடையில் நடக்கலாம் என்று பலரும் ஆருடம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னாள் உதவியாளர் புதிதாக ஒன்றைக் கூறுகிறார்.
தி எட்ஜ் பினான்சியல் டெய்லியில் பத்தி எழுதிய ஓ ஈ சன், ஆண்டின் நடுப்பகுதியில் பல விழாக்கள் வருவதால் தேர்தல் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு அவர் முன்வைக்கும் காரணங்கள் வருமாறு:
நாடாளுமன்றத்தில் புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அதை அமல்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள தேர்தல் ஆணைய(இசி)த்துக்கு நிறைய வேலைகள் காத்திருக்கும். புதிய தேர்தல் எல்லைகளை அது அமல்படுத்தி முடிக்க வேண்டும். அதற்கு நீண்ட காலமாகலாம்.
திருத்தப்பட்ட தேர்தல் தொகுதி எல்லைகளுக்கு ஏற்ப வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.
தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்தது பிஎன்னுக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டாலும் தேர்தலில் வெற்றி பெறுவது அப்படி ஒன்றும் எளிதல்ல, ஒவ்வொரு வாக்கையும் பெற முன்னைவிட கடுமையாக பாடுபட வேண்டியிருக்கும்.
வேட்பாளர்கள் திருத்தப்பட்ட தொகுதிகளில் உள்ள ‘புதிய’ வாக்காளர்களுக்குத் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
“இதற்கெல்லாம் நிறைய நேரம் தேவைப்படும்”, என்றாரவர்.
ஜூனில் தேர்தல் நடக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அப்போது சாபாவில் கடாசான்கள் காமதான் விழாவைக் கொண்டாடுவார்கள், சரவாக்கில் காவாய் விழா கொண்டாடப்படும்.
“ரமலான் மே நடுப்பகுதியில் தொடங்கினால் ஜூலைவரை ராயா மாதமாகிவிடும். அதற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படாதிருந்தால் தானாகவே கலைந்துவிடும்.
ஆகஸ்ட் பிற்பகுதியில் ஹஜ்ஜு காலம் தொடங்கும். அப்போது தேர்தலை வைக்க முடியாது. அம்னோ, பாஸ் ஆதரவாளர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
“இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஜூலைக்கும் ஆகஸ்ட் முற்பகுதிக்குமிடையில் தேர்தல் நடத்தப்படும் சாத்தியம்தான் அதிகம் உள்ளது”, என்றவர் முடிக்கிறார்.
ஒன்றை மறந்து விட்டீர்கள். ஜோசியர்கள் சொல்லுகின்ற தேதியில் தான் அவர் தேர்தல் வைப்பார்!