மரினா மகாதீர் : நாங்கள் இருவரும் ஒத்த சிந்தனைக்கு வந்துவிட்டோம்

மகாதிரின் 22 ஆண்டுகாலப் பிரதமர் பதவி உட்பட பல விசயங்களில், இதற்கு முன்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தற்போது தானும் தன் அப்பாவும் ஒத்த சிந்தனைக்கு வந்துவிட்டதாக, மகாதிரின் மூத்த மகள் மரினா மகாதிர் கூறியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனான ஒத்துழைப்பு, ஊழலை ஒழித்தல் மற்றும் பொதுக் கூட்டம் போன்றவற்றில் அவர்களின் கருத்துகள் ஒத்து போவதாக, ‘சேனல் நியூஸ் ஆசியா’-வுக்கான ஒரு நேர்காணலில் மரினா தெரிவித்தார்.

1998-ஆம் ஆண்டு, அமைச்சரவையில் இருந்து அன்வார் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசியபோது, பிகேஆர் தலைவர் அன்வார் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவர் மகளின் உணர்ச்சிகளைத் தான் ஆழமாகப் புரிந்துகொண்டதாக மரினா கூறினார்.

“என் மகள், அன்வாரின் மகள்களில் ஒருவருடன் பள்ளியில் படிக்கிறாள்,” என்று அவர் கூறினார். “அவர்களுக்கு ஒத்த வயது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், அன்வாரின் மகள் எப்படி பள்ளிக்கு வருவாள் என என் மகள் கூறியிருக்கிறாள். அவள் வகுப்பின் பின் இருக்கையில் அமர்ந்து, தினமும் அழுவாள். இது மனிதத்தைப் பற்றியது.”

1969-ஆம் ஆண்டு, அம்னோவில் இருந்து தனது தந்தை பதவி நீக்கம் செய்யப்பட்ட சமயம், தனது குழந்தை பருவத்தை அது நினைவுபடுத்தியது என்று மரினா கூறினார்.

“அந்த நேரத்தில், எனக்கு 11 வயது, பதவி நீக்கம் என்றால் என்னவென்று எனக்கு புரியவில்லை. அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று நான் நினைத்தேன். நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எனக்கு மிகவும் பயமாக இருந்தது.

“அதனால்தான், 1998-ல் நடந்த சம்பவத்தால், அன்வாரின் மகள் மீது எனக்கு பரிவுணர்வு ஏற்பட்டது. 11 வயதில் நான் உணர்ந்ததை, அன்வார் மகளும் உணர்ந்திருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது,” என்று அவர் கூறினார்.

ஊழலை எதிர்த்துப் போராடும் பிரச்சனையில், அந்த இரு தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மரினா வலியுறுத்தினார்.

1998-ல், அன்வாரைச் சிறையில் அடைக்க, டாக்டர் மகாதிருக்குச் சொந்த காரணங்கள் இருந்திருக்கலாம் என தான் நம்புவதாக அவர் கூறினார்.

அன்வாரைப் பதவி நீக்கம் செய்தது தனது தவறான அரசியல் கணிப்பு என்று அண்மையில் மகாதிர் கூறியிருந்தார்.

தெருப் போராட்டங்களைக் கடுமையாக எதிர்த்து வந்த மகாதிர், தற்போது அதில் சிந்தனை மாற்றம் கண்டுள்ளதையும் மரினா வரவேற்றார்.

“தெருப் போராட்டங்கள் அவர் நினைத்தது போல் அல்ல என்பதை அவர் உணர்ந்துள்ளார், அதனால்தான் பெர்சே 5-ல் அவர் பங்கேற்றார். ஆக, அவர் பல வழிகளில் தனது மனதை மாற்றிக்கொண்டார், அது நல்லது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சில விஷயங்களில் தனது தந்தையுடன் ஒத்துப் போகவில்லை என்றாலும், அவர்கள் எப்போதும் நெருக்கமானவர்கள் என்றார் மரினா.

“என் தந்தைக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை, கருத்து வேறுபாடுகள் எங்கள் உறவைப் பாதிக்க நாங்கள் அனுமதித்ததில்லை.

“என் அப்பாவைச் சந்திப்பவர்கள், ‘மரினா ஏன் இப்படி பேசுகிறாள்?’ என்று கேட்பது எனக்குத் தெரியும், அதற்கு என் அப்பா ‘தெரியாது’ எனும் வகையில் தோள்பட்டையை மட்டுமே உயர்த்தி காட்டுவார்.”