பக்கத்தான் ஹரப்பான் சின்னம் வாக்குச் சீட்டில் இடம்பெறும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அக்கூட்டணி ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்திலேயே பங்காளிக் கட்சிகள் அனைத்தும் போட்டியிடலாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.
அது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை மன்றத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் கட்சிகள் புதன்கிழமை நடைபெறும் அடுத்த கூட்டத்தில் அவற்றின் நிலைப்பாட்டை எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் சில வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹரப்பான் முறையான கூட்டணியாக தன்னைப் பதிந்துகொள்ள சங்கப் பதிவக(ஆர்ஓஎஸ்)த்திடம் மனுச் செய்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. பெர்சத்து கட்சி பிரச்னைகளை எதிர்நோக்குவதால் கூட்டணி பதிவு செய்யப்படுவது தடைப்பட்டுள்ளது.
கூட்டணி ஒன்றுபட்டிருப்பதைக் காண்பிக்க அவை ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன.
அதற்கு ஆர்ஓஎஸ் தடையாக இருக்குமானால் ஒன்றும் கெட்டுப்போகாது, கூட்டணியிடம் ‘பிளான் பி’, ‘பிளான் சி’ கைவசம் இருப்பதாக ஏற்கனவே ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியிருக்கிறார்.
இந்தத் திட்டங்கள் இப்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எல்லாக் கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது என்று முடிவு செய்தால் ஒன்று பிகேஆர் சின்னத்தை அவை பயன்படுத்தும் அல்லது அமனா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
பெர்சத்து பதிவு இரத்துச் செய்யப்படும் அபாயத்தில் உள்ளதால் அதன் சின்னத்தைப் பயன்படுத்த முடியாது.
டிஏபி சின்னத்தையும் பயன்படுத்த முடியாது. மலாய்க்காரர்களுக்கு அக்கட்சிமீது ஒரு சந்தேகம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது.
அமனா சின்னத்தைப் பயன்படுத்துவதிலும் ஒரு பிரச்னை உள்ளது. பாஸில் உள்ள ஹரப்பான் ஆதரவாளர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
அமனாவுடன் ஒப்பிடும்போது பிகேஆருக்கு நீண்ட வரலாறு உண்டு. பல்லினங்கள் வாழும் பகுதிகளில் நல்ல ஆதரவைப் பெற்றுள்ள அக்கட்சி மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலும் கால் பதித்துள்ளது.
எப்படிப் பார்த்தாலும் ஒரு கட்சியின் சின்னத்தைப் பொதுவான சின்னமாகக் கொண்டு மற்ற கட்சிகளும் போட்டியிடுவதில் சாதக பாதகங்கள் இருக்கவே செய்யும். அதை எல்லாம் பேசித் தீர்வு காண வேண்டும்.
“எதுவும் முடியாதென்றால், 2013-இல் பக்கத்தான் ரக்யாட் செய்ததுபோல் கட்சிகள் சொந்த சின்னங்களிலேயே போட்டியிடும்”, என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
பொதுச் சின்னம் வேண்டாம் தனித்தனிச் சின்னங்களில் போட்டியிடுவது என்று ஹரப்பான் முடிவு செய்தால் பெர்சத்து மட்டும் 14வது பொதுத் தேர்தலுக்குமுன் அது பதிவு இரத்துச் செய்யப்பட்டால் வோறொரு கட்சியின் சின்னத்தில்தான் போட்டிபோட வேண்டியிருக்கும்.
அரசியல் கட்சிகள் சின்னம் விசயத்தில் அவர்களின் நலனை மற்றும் பார்க்க முடியாது. இங்கே மிக முக்கியம் மக்கள் எளிதாக அடையாளம் தெரிந்துக்கொள்வதும், எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ளும் சின்னத்திற்கே அதிக வாக்குகள் கிடைக்கும், ஆகா சீனர்கள் அதிகம் வாக்காளர்களை கொண்ட தொகுதிகளில் ராக்கொட் சின்னமும் , சீனர் அல்லாஈத இடங்களுக்கு கெஅடிலான் சின்னமுமே உகந்தது என்பதை ஹராப்பான் தலைகள் எணர்ந்தால் சரி!