முன்னாள் தகவல் துறை அமைச்சர் ரயிஸ் யாத்திம் 1எம்டிபி விவகாரத்தை கடுமையாகக் குறைகூறி வருகிறார். ஆனாலும், அவர் எல்லாவகையிலும் அம்னோக்காரராகவே இருந்து வருகிறார்.
ஆகவே, வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னிலிருக்கும் மலாய்க் கட்சியாகிய அம்னோவுக்கு பரப்புரை செய்வார்.
“நான் ஓர் அம்னோக்காரர். நான் இன்னும் நீக்கப்படவில்லை. நான் நீக்கப்பட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது”, என்றாரவர்.
நான் எனது ஜெலுபு தொகுதியின் மூலம் பரப்புரை செய்வேன். கண்டிப்பாக அம்னோவுக்காகவும் பிஎன்னுக்காகவும் பரப்புரை செய்வேன் என்று மலேசியாகினியுடனான ஒரு நேர்காணலில் ரயிஸ் கூறினார்.
1எம்டிபி விவகாரத்தில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள வணிகர் ஜோ லோ மற்றும் அவருக்குச் சொந்தமானது என்று கூறப்படும் ஈக்குவானிமிட்டி உல்லாசப் படகு குறித்த குற்றச்சாட்டுகளை முதலில் முழுமையாக விசாரிக்காமல் அவற்றை நிராகரித்தற்காக ரயிஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் மற்றும் சிறப்பு விவகாரங்கள் இலாகா (ஜாசா) அதிகாரி துன் பைசால் அசிஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அரசாங்கத்தின் சிறப்பு ஆலோசகர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் பிரதமர் நஜிப்புக்கு மட்டும் ஆலோசனை கூறியதாகத் தெரிவித்த ரயிஸ், அரசாங்கத்துக்காக பரப்புரை செய்யும் போதும்கூட தாம் தவறு என்று கருதும் ஒன்றதுக்கு எதிராகப் பேசப் போவதாக அவர் மேலும் கூறினார்.
நான் ஒழுங்குமுறையை மீற மாட்டேன். ஆனால் தவறானது என்று கருதும் விவகாரங்களை நான் எழுப்புவேன் என்றாரவர்.