எதிர்க்கட்சிகளின் ‘பொய்மூட்டைகளை’ப் பிரசுரிக்கிறதாம் எக்கோனோமிஸ்ட்: மலேசிய தூதர் சாடல்
கிம் குவெக்: சீனத்தில் ஒரு பழமொழி உண்டு, ‘வாய் திறக்காவிட்டால் நீங்கள் அறிவுகெட்ட ஜன்மம் என்பது தெரியாமல் போய்விடும்’ என்று.
இப்பழமொழி யுனைடெட் கிங்டத்துக்கான மலேசிய உயர் ஆணையர் அஹமட் ரசிடி ஹசிசி-க்கு மிகவும் பொருந்தும்.
1எம்டிபியில் MO1 (மலேசிய முதல்நிலை அதிகாரி) க்கு தொடர்புண்டு என்று அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களில் 36 தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்தான் அந்நிறுவனத்தில் நிகழ்ந்த கொள்ளையின் நாயகன் என்பதில் சந்தேகமே இல்லை.
அந்த விவகாரம் பற்றி அறிந்தவர்களுக்கு எம்ஓ1 என்றால் அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் என்பது நல்லாவே தெரியும். அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லானே அதைக் கூறியுள்ளார். அது தெரியாதிருப்பவர் ஒரு முட்டாளாகத்தான் இருக்க முடியும். ரசிடி, நீங்கள் அதை அறியாதவர்போல் தெரிகின்றதே அப்படியென்றால் நீங்கள் அடிமடையரா?
தொகுதி எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்ட விவகாரத்துக்கு வருவோம்: எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டதை தி எக்கோனோமிஸ்ட் குறைகூறவில்லை. எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டதில் ஆளும் கட்சிக்குச் சாதகமான முறையில் தில்லுமுள்ளுகள் நிகழ்ந்திருப்பதைத்தான் குறைகூறுகிறது. பாவம் ரசிடி, அவருக்கு அது தெரியவில்லை.
யுகே போன்ற ஒரு முக்கியமான நாட்டுக்கான நம் தூதர், பிரதமரைத் தற்காப்பதற்காக இப்படிப்பட்ட அபத்தமான கடிதத்தை எழுதியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
விஜய்47: ஐயா தூதர் அஹமட் ரசிடி அவர்களே, நம் அரசியல் தலைவர்கள் அல்லது உயர் அரசு அதிகாரிகள் விசயத்தில் பிரிட்டன் மக்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்குமானால் அதை உங்கள் கடிதம் தீர்த்து வைத்திருக்கும்.
உங்கள் கூற்றுப்படி மலேசியாவின் எதிரணியினர்- டோனி புவா, ரபிசி ரம்லி, லிம் கிட் சியாங் முதலானோர் அடங்கிய அக்கூட்டம்- ஒரு பொய்யான செய்தியைச் சொல்லி ஒன்றல்ல, இரண்டல்ல, அமெரிக்கா உள்பட எட்டு நாடுகளை நடவடிக்கை எடுக்க வைத்து விட்டார்களே, உலகிலேயே அபார சக்தியும் செல்வாக்கும் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
நமது தேர்தல் ஆணையம் எல்லா தொகுதிகளும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில்தான் திருத்தி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்கிறது. 144,000 வாக்காளர்களைக் கொண்ட காப்பார் தொகுதியும் 15,000 வாக்காளர்களைக் கொண்ட புத்ரா ஜெயாவும் ஒன்றா?
மேலை நாடுகளில் இப்படி இல்லையா என்று திருப்பிக் கேட்கிறது. தேர்தலை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள அமைப்புகளுக்கு எதிராக எந்த நாட்டிலாவது புகார்கள் கூறப்பட்டுள்ளனவா, சொல்லுங்கள் பார்ப்போம்.
உங்கள் கடிதத்தை வாஷிங்டன், வால் ஸ்திரிட் ஜர்னல் ஆகியவற்றுக்கும் அனுப்பி வையுங்கள். அமெரிக்கர்களும் நகைச்சுவையை அனுபவிக்கட்டும்.
ஸ்லம்டோக்: இசி திருத்தி அமைத்துள்ள தேர்தல் தொகுதி எல்லைகளைக் கண்ணுறும் எந்த ஒரு சுயேச்சை பார்வையாளரும் அரசமைப்பு மீறப்பட்டிருக்கிறது, தில்லுமுள்ளு நிகழ்ந்திருக்கிறது என்ற முடிவுக்குத்தான் வருவார். அதை மறுபரிசீலனை செய்ய எதிரணியினரும் பாதிக்கப்பட்ட வாக்காளர்களும் விடுத்த கோரிக்கைகளை ஒன்று இசி நிராகரித்தது அல்லது நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
நஜிப்புக்காக பரிந்துபேசும் ஒரு அமைப்புத்தான் இசி. தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கை மொத்தமும் ஒரு ஏமாற்று வேலைதான்.
எர்கோ சம்: மேலைநாடுகள் செய்வதுபோல்தான் தொகுதி எல்லைகள் திருத்தி வரையப்பட்டுள்ளன என்றால் தொகுதி வாக்காளர்களே ஆட்சேபனைகளை எழுப்புவானேன்? விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்வதேன்?
தூதர் அவர்களே, குறிப்பிட்ட வேட்பாளர்கள் வெற்றிபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக தொகுதி எல்லைகளைப் பிரிப்பது நீண்டகாலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். எக்கோனோமிஸ்டின் குற்றச்சாட்டில் அதிருப்தி அடைந்திருந்தால் அந்நாளேட்டிடம் மன்னிப்பு கேட்கும்படி கோர வேண்டியதுதானே? மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்குத் தொடுக்கலாமே.
அது வெளிநாட்டுப் பத்திரிகைகள் பொய்ச் செய்திகள் வெளியிடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.