அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போலிச் செய்திச் சட்டம் வெளிநாட்டு ஊடகங்கள்மீதும் பயன்படுத்தப்படுமா என்று புக்கிட் குளுகோர் எம்பி ராம்கர்பால் சிங் வினவியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்கள் 1எம்டிபி விவகாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளன. சில ஊடகங்கள் பிரதமருக்கு அதில் தொடர்பிருப்பதாகக் கூட குற்றம் சாட்டியுள்ளன.
“உத்தேச போலிச் செய்திச் சட்டம் முன்குறிப்பிட்ட ஊடகங்கள்மீதும் பாயுமா?
“அரசாங்கம் த வால் ஸ்திரிட் ஜர்னல், தி எக்கோனோமிஸ்ட் போன்ற பத்திரிகைகளில் பழித்துரைக்கும் செய்திகளை வெளியிட்டவர்களைக் கைது செய்து இப்புதிய சட்டத்தின்படி தண்டிக்க இண்டர்போல் உதவியை நாடுமா?”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் வினவியிருந்தார்.
அவ்வூடகங்களுக்கு எதிராக பிரதமரும் அரசாங்கமும் இதுவரை எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், புதிய சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படாது என்பது “நிச்சயம்’ என்றார்.
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக 1எம்டிபிமீதான விமர்சனங்களை அடக்கி வைக்கத்தான் புதிய சட்டம் கொண்டுவரப்படுவதுபோல் தெரிகிறது என்றும் ராம்கர்பால் கூறினார்.