டாக்டர் மகாதிர் முகம்மட் பொது விவாத மேடையில் தம்மைச் சந்திக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் ஒருமுறை சவால் விடுத்துள்ளார்.
தம்மிலும் 30வயது குறைந்தவரான நஜிப், முன்பு இரண்டு தடவை ‘மறைப்பதற்கு ஏதுமில்லை’ கருத்தரங்குக்கு வராமல் ஏமாற்றி விட்டதாக மகாதிர் கூறினார்.
“ஜூலையில் எனக்கு 93 வயதாகும். ஆமாம் 93. நஜிப் என்னைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், நஜிப் பயப்படுகிறார். என்னோடு வாதமிட பயப்படுகிறார்”, என்று தம் வலைப்பதிவில் மகாதிர் பதிவிட்டிருந்தார்.
“மாண்புமிகு (நஜிப்) இன்னும் இளைஞர்தான். அவர் 90 வயதானவருடன் வாதமிட அஞ்சுவானேன்? மறைப்பதற்கு எதுமில்லை என்றால் பகிரங்கமாகச் சொல்லுங்கள். பிறகு இக்கிழவன் நீங்கள் எப்படியெல்லாம் விசயங்களை மறைத்து வைத்தீர்கள் என்று காண்பிப்பேன்”.
அதைக் கேட்டபின்னர் மக்கள் முடிவு செய்யட்டும் உண்மைகளை ஒளிப்பது ‘முதுமையா இளமையா’ என்று என மகாதிர் கூறினார்.
“உங்கள் உயர் அதிகாரிகள், இளம் அமைச்சர்களுடன் வாருங்கள். கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா உள்பட வெளிநாட்டு நிபுணர்களையும் அழைத்து வாருங்கள், உங்களால் முடியாதபோது பதில்களை (உங்கள் காதுகளில் இரகசியமாக) எடுத்துரைக்க”, என்றார்.
தாம் 22ஆண்டுகள் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தவை பற்றி நஜிப் வினவலாம் என்றும் மகாதிர் தெரிவித்தார்.
“பேங்க் நெகாராவின் பல பில்லியன் டாலர் (அந்நிய செலாவணி) இழப்புப் பற்றி, பெர்வாஜா (எஃகு) பற்றி இன்னும் அவை போன்ற விவகாரங்கள் பற்றிக் கேட்கலாம். நான் நிபுணர்களை அழைத்து வர மாட்டேன். தனியாகத்தான் வருவேன்”.
நீண்ட காலம் வாழப்போவதில்லை என்பதை உணர்வதாகவும் மகாதிர் கூறினார்.
“விரைவில் போய் விடுவேன் என்பது தெரியும். ஆனால், என் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருக்கும்வரை இனத்துக்காக, சமயத்துக்காக, நான் நேசிக்கும் நாட்டுக்காகப் போராடுவேன்”, என்றார்.