மரியா சின் பிகேஆர் குடும்பத்தில் ஒருவராகி விட்டார், நூருல் இஸ்ஸா அறிவித்தார்

 

பெர்சேயின் முன்னாள் தலைவர் மரியா சின் அப்துல்லா இப்போது பிகேஆர் குடும்பத்தில் ஒருவர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டதில் கட்சியின் உதவித்
தலைவர் நூருல் இஸ்ஸா இதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், மரியா கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார் என்றும் அவர் கட்சியில் முறைப்படி சேரவில்லை என்றும் பிகேஆரின் இன்னொரு உதவித் தலைவர் தியன் சுவா விளக்கமளித்தார்.

இதற்கு முன்பாக, 14 ஆவது பொதுத் தேர்தலில் ஒரு நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடுவதற்காக பேசிக் கொண்டிருப்பதாக மரியா கூறியிருந்தார்.

சீர்திருத்த திட்டங்களுக்குத் தம்மால் முடிந்தவரையில் பங்களிப்பு செய்யப் போவதாக சூளுரைத்த மரியா, கட்சி தமக்கு ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடப் போவதாக கூறினார்.

முறையாக எந்தக் கட்சியிலும் சேர்வதில்லை என்ற தமது முடிவு அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் “புதிய அரசியல்” ஆகும் என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மரியா கூறினார்.