‘இனவாத அரசியலை நிறுத்துக’, சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தினத்தில், பி.எஸ்.எம். கோரிக்கை

2018, மார்ச் 21-ல் அனுசரிக்கப்பட்ட ‘சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தின’த்தை முன்னிட்டு, நேற்று மலேசிய சோசலிசக் கட்சியினர் (பி.எஸ்.எம்.) நாடு தழுவிய அளவில் இனப்பாகுபாட்டை எதிர்த்து, துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

மலேசியாவில் ஒரு நோயாகப் பரவிவரும் இனவாத அரசியலை நிறுத்த வேண்டுமென மக்கள், அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக ள் ஆகியவற்றை  பி.எஸ்.எம். கேட்டுக்கொண்டது.

‘சர்வதேச இனப் பாகுபாடு அழிப்பு தின’த்தை ஒட்டி, பி.எஸ்.எம். தலைமைச் செயலாளர் சிவராஜன் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை பின்வறுமாறு :-

மலேசியாவில், இனவெறி மக்கள் மத்தியில் இருப்பதையும் அரசு நிறுவனங்களால் அது செயல்படுத்தப்படுவதையும் மக்களாகிய நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த இனவாதம் மக்களைப் பிளவுபடுத்த ஒரு கருவியாகப் பயன்படுவதை மக்கள் உணர வேண்டும். பிரிட்டிஸ் காலனித்துவக் காலத்தில் இருந்து, இந்திய மற்றும் சீன தொழிலாளர்கள் அவரவர் பொருளாதார துறைகளுக்கு ஏற்ப இனவாரியாக பிரித்து வைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரில், ஜப்பானியர் ஆட்சியின் போது, இந்தப் பிரித்தாளும் நிலை மிக மோசமடைந்தது.

‘ஜப்பானிய இராணுவத்திற்கு எதிரான மலாயா மக்கள்’ (எம்.பி.ஏ.ஜெ.ஏ.) எனும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் அதிகமானோர் சீனர்கள். ஜப்பானியர்களை எதிர்க்க இவர்களுக்குப் பிரிட்டிசார் உதவினர். அதேசமயம், ‘பெத்தா’ (பெம்பேலா தானா ஆயேர்– தாய்மண் பாதுகாவலர்கள்) போன்ற சில மலாய் இயக்கங்களுக்கு ஜப்பான் ஆதரவாக இருந்தது.

ஜப்பானியர் ஆதரவில் இயங்கிய பெத்தா இயக்கத்தில் இணையச் சொல்லி, இப்ராஹிம் யாக்கோப் மற்றும் போஸ்தமன் போன்ற கெசாத்துவான் மெலாயு மூடா (கே.எம்.எம்.)-இன் சில முன்னாள் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த இனவாதம், ஜப்பானின் தோல்விக்குப் பின்னரும் தொடர்ந்தது, எம்.பி.ஏ.ஜெ.ஏ. உறுப்பினர்கள் (சீனர்கள்) ஜப்பானியர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை (பெரும்பான்மை மலாய்க்காரர்கள்) பலிவாங்க எண்ணினர்.

ஒருங்கிணைந்த பல்லின சமூக அமைப்புகளான, ‘புத்ரா’வும் – அனைத்து மலாயன் கூட்டுச் செயற்பாட்டு கவுன்சிலும் (ஏ.எம்.சி.ஜெ.ஏ.) பிரித்தானியர்களிடமிருந்து மலாயாவுக்கு சுதந்திரத்தை வாங்கியிருந்தால் இந்தப் பதற்றம் ஆற்றப்பட்டிருக்கும்.

காரணம், அனைவரும் ‘மலாய்க்காரர்’ எனும் குடியுரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற  நிபந்தனையோடு, மலேசியக் குடியுரிமை அனைவருக்கும் திறந்திருப்பதாக புத்ரா- ஏ.எம்.சி.ஜெ.ஏ. ‘மக்கள் அரசியலமைப்பு’ முறையை முன்மொழிந்தது. நிறுவப்படும் சட்டத்தில் இனப் பாகுபாட்டைத் தடுக்க, ஓர் ‘இன அவை’ உறுவாக்கப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டது. ஒருவேளை அந்த அரசியலமைப்புச் சட்டம் இன்று நடைமுறையில் இருந்திருந்தால், மலாய்க்காரர், சீனர், இந்தியர், பூமிபுத்ரா, பூமிபுத்ரா அல்லாதவர் என்ற பிரச்சனைகள் நம்மிடையே இருந்திருக்காது.

துரதிர்ஷ்டவசமாக, பிரித்தானியர் மலாயாவின் சுதந்திரத்தை அம்னோ மற்றும் அதன் இனக் கட்சிகளான ம.இ.கா மற்றும் மசீச-விடம் வழங்கியது. எனவே, இனம் சார்ந்த அரசியல், இன்றுவரை மக்களின் மரபுரிமை ஆனாது. மலேசிய அரசியலில் இனவாதக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் வரை, இனவாதப் பிரச்சனைகள் தொடரும்

மக்கள் எப்போதும் இந்த அம்னோ- ம.இ.கா – மசீச குழுக்களின் விளையாட்டுகளால் ஏமாற்றப்படுகிறார்கள். மக்கள் ஒற்றுமையாக இருப்பதால், தங்களின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று ஒவ்வொரு முறை உணரும்போதும், ஏதாவதொரு இனவாதப் பிரச்சனையை அவர்கள் தூண்டிவிடுவார்கள். மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கி முதியவர்கள் வரை, இந்த இனவாத சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். காரணம், அவர்கள் மனதின் ஒரு மூலையில் தங்கள் இனத்தைக் பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது. இது நமது பலவீனம், இதனை அரசாங்கம் பயன்படுத்திகொள்கிறது.

இவற்றிலிருந்து பி.எஸ்.எம். மாறுபட்டது. சுகாதார சேவைகளைத் தனியார் மயமாக்குதல் மற்றும் ஜிஎஸ்டி எதிர்ப்பு, இலவசக் கல்வி பிரச்சாரம், வறுமை, தொழிலாளர் போராட்டங்கள், குறைந்தபட்ச ஊதியம், குத்தகைத் தொழிலாளர் அமைப்பு முறையை எதிர்த்தல், வேலையின்மை, வீடுகள் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற விஷயங்களில் இனவாரியாக இல்லாமல், வர்க்க ரீதியில் மக்களை ஒன்றுபடுத்த பி.எஸ்.எம். எப்போதும் முயற்சித்து வந்தபோதும், இந்த முயற்சிகளுக்கு இனப் பிரச்சினைகள் எப்போதும் ஒரு பெரும் போட்டியாகவே இருந்து வந்துள்ளன.

துரதிருஷ்டவசமாக, பல அரசியல் கட்சிகள் – ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என இரு தரப்புகளுமே – பொருளாதார வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள், தாய் மொழி, பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத பிரச்சினைகள், ஷரியா சட்டம், விவாகரத்து மற்றும் இன்னும் பிற பிரச்சினைகளை இனவாத பிரச்சினைகளாக அணுக மக்களைப் பழக்கிவிட்டுவிட்டன. ஆனால், இந்தப் பிரச்சினைகளை இனரீதியான உணர்வுகளால் நிச்சயம் தீர்க்க முடியாது.

மலாய்க்காரர்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, மகாதிரைப் பக்காத்தான் ஹராப்பான் தலைவராகவும் பிரதம வேட்பாளராகவும் எதிர்த்தரப்பினர் நியமித்தது, இனவாத உணர்வை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு ஒரு சான்று, இது பி.எஸ்.எம்.-மிற்கு ஏமாற்றத்தைத் தந்தது. சவால்களைச் சந்திக்க, புதியதொரு அரசியல் அணுகுமுறையைக் கையாளாமல், மகாதிர் மற்றும் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியைப் பயன்படுத்தி, குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து விட்டனர், எதிர்க்கட்சியினர்.

ஆனால், பி.எஸ்.எம். வேட்பாளர்கள் அப்படியல்ல, 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளர்களும், பிரச்சாரத்தில் இனவாத அரசியலைப் புறக்கணிப்போம், இனவாதத்தை எதிர்த்து இறுதிவரைப் போராடுவோம் என உறுதியளிக்கிறோம்.

வர்க்க அடிப்படையில், பல்லின, மத இயக்கங்களாலேயே இனவாதத்தை எதிர்த்து போராட முடியுமென பி.எஸ்.எம் நம்புகிறது. இன ஒடுக்குமுறை பிரச்சனைகளை ஓர் இனத்தால் மட்டும் எதிர்த்துபோராடி வெற்றிபெற முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

எனவே, முதல் கட்டமாக, சமூக-பொருளாதார-அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ள ஒரு வர்க்க அடிப்படையிலான இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும், பல்வேறு இனங்களின் மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தப் பல்லின இயக்கத்தை உருவாக்கிய பின்னரே, நாம் இனப்பாகுபாடற்ற கொள்கைகளுடன் சேர்ந்து போராட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

மக்கள் சக்தியைக் கட்டமைப்போம், இனவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்!