தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தேர்தல் தொகுதி வரையறை மறுஆய்வு, பாரிசானை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளில் வெற்றிபெற வைக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆய்வாளர் வோங் சின் ஹூவாட், இது நாடாளுமன்ற தொகுதிகள் சமநிலையை மோசமாக்கலாம் என்று ‘தி ஆஸ்திரேலியன்’ செய்தித்தாளிடம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறார்.
“இந்தத் தேர்தல் தொகுதிகள் சீரற்றதாக இருந்தால், அது அரசாங்கத்திற்குச் சிறந்த சூழ்நிலையை உருவாக்கும்.
“வாக்களிப்போர் எண்ணிக்கை 70 விழுக்காட்டுக்குக் குறைந்துவிட்டால், அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வென்றெடுக்க முடியும்,” என்று வோங் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானுக்குச் சராசரி 77,655 வாக்குகள், பாரிசானுக்கு சராசரி 46,510 வாக்குகள் என்று வோங் தெளிவுபடுத்தினார்.
தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ள தேர்தல் தொகுதி வரையறை, சமநிலையை மோசமாக்குவதால் மட்டும் விமர்சிக்கப்படவில்லை, மாறாக இன அடிப்படையில் அமைந்துள்ளதாலும் ஹராப்பானால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.
“ஒரு தொகுதியில் சீனர்களின் வாக்குகளையும் மற்றொரு பகுதியில் மலாய்க்காரர்களின் வாக்குகளையும் சேகரிக்கும் வகையில் ஒரு தேர்தல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கின்றனர். இது ஓர் இன குழுவுக்கு மட்டுமே பணியாற்றும் பிரதிநிதிகளை உருவாக்கி, மக்களைப் பிளவுபடுத்தும்,” என்று பிகேஆர் துணைத் தலைவர் தியான் சூவா கூறியுள்ளார்.
“இது நீண்டகால தாக்கத்தை உருவாக்கும், ஒரு பிளவுபட்ட நாடாளுமன்றத்தை நாம் கொண்டிருப்போம். நாங்கள் தோற்று போவோம் என்பதால் அல்ல, மாறாக அது நாட்டிற்குத் தீங்கு விளைவிப்பதால், கொள்கை அடிப்படையில் இதை எதிர்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.