அமைச்சர்: நாட்டின் பொருளாதார நிலை நிச்சயமற்ற நிலையில் இருந்தாலும், வெற்றிகரமாகவே உள்ளது

அண்மைய காலமாக, நாட்டின் பொருளாதார நிலைமை நிச்சயமற்று இருந்தபோதிலும், வெற்றிகரமாகவே இருப்பதாக இரண்டாம் நிதி அமைச்சர் ஜொஹாரி அப்துல் காணி கூறினார்.

கணிக்க இயலாதப் பொருளாதாரச் சூழலில் இருந்த போதிலும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, நிர்ணயிக்கப்பட்ட அதன் பிரதான செயல்திறன் குறியீட்டு (கேபிஐ) இலக்கை அது அடைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

“நாணய ஏற்ற இறக்கங்கள், பொருட் சந்தை மற்றும் நிச்சயமற்ற பூகோள அரசியல் சூழ்நிலையிலும், நம்மால் 5.9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்துள்ளது.

“உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, ஒரு நாடு தேவையான மூலதனத்தைக் கொண்டிருக்க வேண்டும், எனவே நாம் அதனை நன்றாகச் செய்துள்ளோம்,” என ஜொஹாரி இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார்.

“ஒவ்வொரு ஆண்டும், வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும்போது, நாட்டிலுள்ள தொழில்முனைவோருக்கு உதவ, நாம் நிதி ஒதுக்கீடு செய்கிறோம், மேலும் அதிகமான தொழில்களை உருவாக்க,” என்று அவர் கூறினார்.

“இன்று பல பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, வேலைவாய்ப்பு சந்தை கடினமாக உள்ளது. எனவே, இந்தப் பட்டதாரிகள் வியாபாரம் செய்ய பரிசீலிக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

நாடு முன்னேற்றம் அடைய, அரசியல் நிலைத்தன்மை, நிலையான நிதி பராமரிப்பு, நல்ல கல்வி மற்றும் வலுவான நாடு ஆகிய நான்கு கோட்பாடுகளில் தேசியப் பொருளாதாரம் இணங்கி இருக்க வேண்டும் என்று ஜொஹாரி தெரிவித்தார்.

-பெர்னாமா