சரவாக் வாக்காளர் பட்டியலைப் பார்த்துக்கொண்டு வந்த பெட்ராஜெயா டிஏபி சோசலிஸ்ட் இளைஞர் பகுதி விளம்பரப் பிரிவுச் செயலாளர் அப்துல் அசீஸ் இசா அதில் முகமட் சைட் பின் முகம்மட் அர்ஷாட் முகம்மட் சைட் என்ற பெயரைப் பார்த்து அதிர்ந்து போனார்.
பெயர் அதிர்ச்சி அளிக்கவில்லை, அவர் 1868, ஜனவரி முதல் தேதி பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருந்ததுதான் அசீசுக்கு அதிர்ச்சி அளித்தது.
உடனடியாக மலேசியாகினியைத் தொடர்புகொண்ட அசீஸ், “மர்ம மனிதர்’ முகம்மட் சைட் கொரோகோப் மாவட்டத்தில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டுள்ளார் என்றார்.
“இந்தத் தகவல் மட்டும் உண்மையாக இருந்தால் 150-வயது மனிதரைக் கொண்ட நாடு என்ற பெருமை மலேசியாவைச் சேரும்”, என்றார்.
“கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள உலகின் மிக வயதானவர் ஒரு பிரெஞ்ச் பெண்மணி. (1875-இல் பிறந்த) அவர் 122-வது வயதில் காலமானார்”, என்று அசீஸ் சுட்டிக்காட்டினார்.
அவரது பெயர் பதிவாகி இருக்கும்போது 150-வயது முகம்மட் சைட்டின் பெயர் ஏன் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்று குழம்பிப் போயிருக்கிறார் அசீஸ்.
இப்போதைய உலகின் மூத்த குடிமகனாகக் கருதப்படுபவர் ஒரு ஜப்பானியர். நபி தஜிமா என்ற பெயரைக் கொண்டவர். அவருக்கு வயது 117.
“எனக்கு என்னமோ இசி-யின் வாக்காளர் பட்டியலில் நம்பிக்கை இல்லை. ஆனால், அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் வாக்காளர் முகம்மட் சைட்டிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
“அது உண்மையில்லை என்றால், ‘ஆவி வாக்காளர்கள்’ வாக்களிப்பில் மோசடி செய்வதைத் தடுக்க 14ஜிஇக்கு முன் இசி வாக்காளர் பட்டியலைச் சரிசெய்ய வேண்டும்”, என்றாரவர்.
இந்த விவகாரம் ஒரு சுயேச்சை அமைப்பான இசிமீது சந்தேகம்கொள்ள வைக்கிறது,
“இதற்கு விளக்கமளிக்காது போயின் அது மேலும் பல கேள்விகளுக்கு வழிகோலும்.
“எனவே, இந்த ‘மர்ம வாக்காளர்’ குறித்த விவரங்கள் சரியானவைதானா என்று இசி விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”, என அசீஸ் கூறினார்.
பொய்யான தகவலுக்கு இப்பொழுது சட்டத்திற்கு வேலை கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன்!!!!!!!!