பொய்ச் செய்தி தடுப்புச் சட்டவரைவு ஊடகங்களைக் கட்டுப்படுத்தும், பத்திரிக்கையாளர் சங்கம் கவலை

பொய்ச் செய்திகள் பரப்பும் நபர்களை இலக்காகக் கொண்ட பொய்ச் செய்தி தடுப்புச் சட்டவரைவு, ஊடகங்கச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் என தீபகற்ப மலேசியா தேசியப் பத்திரிக்கையாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

“இந்த மசோதா, ஊடகங்களுக்குப் பரந்தளவில் விளைவை ஏற்படுத்தும். ஏனென்றால், செய்தியின் ஆதாரங்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் நிதியாளர்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கவும் கட்டுரைகளை நீக்கச் சொல்லி ஓர் ஊடக அமைப்பை கட்டாயப்படுத்தவும் இதனால் முடியும்.

“இதன் இலக்கு பொய்ச் செய்திகள் பரப்புபவர்களை இலக்காகக் கொண்டிருந்தாலும், ஊடக அமைப்புகளைத் தடைசெய்யக்கூடிய சாத்தியமும் உண்டு,” என்று அச்சங்கத்தின் தலைமைச் செயலாளர் சின் சுங் சியு சொன்னார்.

சட்டப் பிரிவு 8 (3) கீழ், பொது இணக்கம் அல்லது தேசியப் பாதுகாப்பிற்கு மிரட்டல் என்று கருதப்படும் ஒரு தகவலை நீக்கச்சொல்ல அரசாங்கத்திற்கு அதிகாரம் உண்டு என்று சின் விளக்கினார்.

அத்தகைய உத்தரவின் மீது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் RM500,000 அபராதம் விதிக்கும், கடுமையான தண்டனையைப் பற்றியும் சின் கவலை தெரிவித்தார்.

“இதுபோன்ற பிரச்சினைகளுக்குத் தற்போதைய சட்டங்களில் இருக்கும் தண்டனையை விட, இந்த மசோதா மிகவும் கடுமையான அபராதங்களை ஏன் கொண்டிருக்கிறது என்றும் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது,” என்று அவர் கூறினார்.

தவறான செய்திகளின் ஏகபோக வரையறை

இதற்கிடையே, அந்தச் சட்ட வரைவில், ‘பொய்ச் செய்தி’ என்பதற்கான வரையறை மிகவும் பரந்தளவில் உள்ளது. அதனால், பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த எளிதாக அது பயன்படுத்தப்படும் என்று ‘கெராக்கான் மீடியா மெர்டெக்கா’ (கெர்ராம்) ஊடகவியளாளர் குழு தெரிவித்தது.

இந்தச் சட்ட வரைவு இவ்வார இறுதியில் அங்கீகரிக்கப்படவுள்ளது என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்கும் வழியாக, டுவிட்டர் ஓன்லைன் பிரச்சாரத்தில் இணையும்படி, அனைத்து தரப்பினரையும் ‘கெர்ராம்’ கேட்டுக்கொண்டது

“தவறான செய்திகளின் வரையறைக்கு, அரசாங்கம் ஏகபோக உரிமை வைத்திருக்க அனுமதிக்கக்கூடாது,” என்றும் அக்குழு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.