ஜமால்: வரும் புதன்கிழமை, மஞ்சள் சட்டை இருந்தால், சிவப்பு சட்டையும் இருக்கும்

எதிர்வரும் புதன்கிழமையன்று, தேர்தல் தொகுதி வரையரை மறுபரிசீலனைக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் ‘பெர்சே’-வின் நடவடிக்கையைத் தடுக்க, 10,000 உறுப்பினர்களை அணிதிரட்ட உள்ளதாக ‘செஞ்சட்டை’ இயக்கத் தலைவர் ஜமால் முகமட் யுனூஸ் சற்றும் தயங்காது எச்சரித்துள்ளார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், குழப்பத்தை ஏற்படுத்தவும் அரசாங்கத்தை அவமதிக்கவும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஜமால்.

“சிவப்பு சட்டை அணியைச் சேர்ந்த நாங்கள், எதிர்வரும் புதன்கிழமை, 5,000-லிருந்து 10,000 வரையில் நாடாளுமன்றத்தின் முன் கூடவுள்ளோம். ஒருவேளை அன்றைய தினம், மஞ்சள் சட்டை இல்லை என்றால், சிவப்பு சட்டையும் இருக்காது.

முன்மொழியப்பட்ட தேர்தல் தொகுதி வரையரை மறுபரிசீலனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவ்வறிக்கை விவாதிக்கப்படவுள்ள புதன்கிழமையன்று, நாடாளுமன்றத்தில் கூடுமாறு கடந்த சனிக்கிழமை பொது மக்களைப் பெர்சே வலியுறுத்தியது.

அதே நேரத்தில், அந்த அரசு சார்பற்ற நிறுவனம், சபாநாயகர் பண்டிகார் அமின் மூலியாவிடம் ஓர் எதிர்ப்புக் குறிப்புக் கோரிக்கையையும் சமர்ப்பிக்க எண்ணியுள்ளது.

அவ்வறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரும் இருப்பர், ஆக பெர்சே அங்கு எதிர்ப்பு ஆர்பாட்டம் செய்யத் தேவையில்லை என்று அம்னோ தலைவருமான ஜமால் தெரிவித்தார்.

“எதிர்க்கட்சியினர், ஆளுங்கட்சியினர் என இருதரப்பினரும் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கப் போகின்றனர். ஆக, அவர்கள் மக்களின் கருத்தை அங்கு பேசட்டும், சட்டவிரோத ஆர்ப்பாட்டம் தேவை இல்லை,” என்று கூறியதோடு, நாளை பெர்சே மீது காவல்நிலையத்தில் புகார் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.