பிரதமர் நஜிப், முன்னாள் அம்னோ தலைவர்களின் குணங்களைப் பெற்றிருக்கிறார் என, அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமரின் குணாதிசயங்களைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பிகேஆர் பொதுத் தலைவர் அன்வார் இப்ராஹிம்-இன் கவர்ச்சியும் அவரிடம் உள்ளது என்று அனுவார் முசா தெரிவித்தார்.
“துன் அப்துல்லா படாவியின் பொறுமை, அன்வாரின் கவர்ந்திழுக்குத் தன்மை, துன் ஹுசேன் ஓனின் உறுதி, அவரது தந்தை துன் ரசாக்கின் அறிவுக்கூர்மை அனைத்தும் நஜிப்பிடம் உள்ளது,” என்று இன்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, 9 ஆண்டுகள் நிர்வாகத்தில், 22 ஆண்டுகால துன் டாக்டர் மகாதிரின் நிர்வாகத்தைவிட, நஜிப் சிறந்த மரபுகளை உருவாக்கியுள்ளார் என்று அனுவார் தெரிவித்தார்.
“தேசிய உருமாற்றத் திட்ட ஆண்டு அறிக்கை 2017-ஐப் பாருங்கள், உயர் வருமான நிலையை அடைய மலேசியா நெருங்கி வருவதை காட்டுகிறது. இதைப் பார்த்து மகாதிர்கூட தனது சீடர், தன்னைவிட திறமையானவர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தேசிய ஒற்றுமையை உருவாக்குதல், அரண்மனையிடம் நல்ல உறவு, சிறந்த பொருளாதார மதிப்பீடு, சிறப்பான இராஜதந்திர உறவு, கிட்டத்தட்ட ஐந்து மடங்கு நாட்டு இருப்பு மற்றும் நன்கு வளர்ந்த ஜிடிபி, கூடுதல் இலக்குக் கொண்ட மானிய மறுசீரமைப்பு போன்றவை நஜிப்பின் சாதனைகளில் சில என்று அனுவார் கூறினார்.
‘வேறு வழியில்லாததால்’ டாக்டர் மகாதிர் எதிர்க்கட்சியில் சேர்ந்துவிட்டார் என்றும் கெத்தெரா நாடாளுமன்ற உறுப்பினருமான அனுவார் கூறினார்.
“மகாதிரின் மனதுக்குத் தெரியும், டிஏபி தனது தேர்வு அல்ல என்று, அன்வார் அப்பதவிக்குத் தகுதியற்றவர், மாட் சாபுவும் சரியானவர் அல்ல, இவையனைத்தும் மகாதிருக்குத் தெரியும்.
“தனது ஆசை மகன் முக்ரிஸை, கெடா மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கியதால், ஆழமான காயம் அவர் மனதில்,” என்றார் அவர்.