ம இகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 14வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மஇகாவின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட மறுக்கிறார்.
வேட்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகக் கூறிய சுப்ரமணியம், இப்போது எந்தெந்த தொகுதிகளை வைத்துக்கொள்வது எவற்றை மற்ற பங்காளைக் கட்சிகளோடு மாற்றிக் கொள்வது என மஇகா பிஎன் தலைமையுடன் விவாதித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்.
“கிட்டத்தட்ட எல்லா இடங்களுக்குமான வேட்பாளர்களை அடையாளம் கண்டு விட்டோம். கடைசி நேரத்தில் மாற்றங்கள் நிகழலாம். இப்படி சில வேளைகளில் நடப்பதுண்டு”, எனச் சுகாதார அமைச்சருமான சுப்ரமணியம் அண்மையில் பெர்னாமா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
“அந்தந்த தொகுதிகளில் செல்வாக்கு பெற்றுத் திகழும் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்னாள் தலைவர் ஜி.பழனிவேல் அணியிலிருந்து ஒருவரை வேட்பாளராக்கும் எண்ணமும் உண்டு”, என்றாரவர்.
மஇகா வேட்பாளர்களில் 50-இலிருந்து 60 விழுக்காட்டினர் புதுமுகங்களாக இருப்பார்களாம்.
2008-இலும் 2013-இலும் எதிர்க்கட்சிகளிடம் தோற்ற தெலோக் கெமாங், சுங்கை சிப்புட் தொகுதிகளைத் திரும்பக் கைப்பற்றுவதற்கு மஇகா கடுமையாக பாடுபட்டு வருவதாகவும் சுப்ரமணியம் கூறினார்.