அமைச்சர்கள் 1எம்டிபி குறித்து பேசாதிருப்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அழிவுக்குத் துணைபோவதற்கு ஒப்பாகும் என்கிறார் முன்னாள் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திம்.
“பொருளியலாளர்கள் பிரதமர் திருடர் என்று சொல்லி இழித்துரைக்கிறார்கள். நான் சும்மா இருக்க மாட்டேன்.
“சும்மா இருந்து விட்டால் , அமைச்சர்கள் அந்த விவகாரம் பற்றி எதுவும் பேசாதிருந்தால் நீங்கள் பிரதமரை அழிக்க விரும்புகிறீர்கள் என்றாகிவிடும்”, என ரயிஸ் சினார் ஹரியான் நேர்காணலில் கூறினார்.
1எம்டிபி விவகாரம் எதிர்வரும் தேர்தலில் பிஎன் தோல்விக்கு வழிகோலுமா என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறினார்.
உண்மையைத் தேடாதிருந்தால் அது அம்னோவுக்குத்தான் இழப்பாகும் என்றார்.
அந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துடையவராக இருக்கிறார் ரயிஸ். அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றவர் நம்புகிறார்.
“விசாரணை நடப்பதாக அறிவித்து விட்டால், விவகாரம் அடங்கி விடும். பிரதமர் விசாரணைக்கு ஒப்புக்கொள்கிறார் என்பதால் பொருளியலாளர்கள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்”, என்றார்.
தம் கருத்தை நஜிப்பிடமும் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடியிடமும் தெரிவித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.