பிகேஆர் கட்சி மீது நம்பிக்கை இழந்ததால், பிகேஆர் குவா மூசாங்கைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறி, இன்று பாஸ் கட்சியில் இணைந்தனர்
பக்காத்தான் ஹராப்பான் தனது இலக்கை இழந்து, அதன் அசல் போராட்டத்திலிருந்து விலகி சென்றுகொண்டிருப்பதால், தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக, பிகேஆர் குவா மூசாங் தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர் சைட் அஷார் சைட் அல்வி தெரிவித்தார்.
“டாக்டர் மகாதிரும் அவரது புதியக் கட்சியும் ஹராப்பானில் இணைந்தது, மலாய்க்காரர்களின் அரசியலுக்கும் இஸ்லாத்தின் முக்கியத்துவத்திற்கும் இலாபமாக இல்லை.
“அதுமட்டுமின்றி தேர்தல் இருக்கைகளுக்காக, ஹராப்பான் கூட்டணிக் கட்சிகல் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதும் எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது,” என்றார் அவர்.
“அமானா கட்சி தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவது, மக்களை சலிப்படைய வைத்துள்ளது, தவறான நிலைப்பாட்டினால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்,” என்றும் இன்று கோத்தா பாருவில், மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அப்பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சைட் அஷார் மற்றும் அவரது நண்பர்கள் பாஸ் உறுப்பினர் பாரத்தை, குவா மூசாங் பாஸ் தலைவர் அஸ்மான் அஹ்மாட்டிடம் வழங்கினர், கிளாந்தான் மந்திரி பெசார் அஹ்மாட் யாக்கோப்பும் உடன் இருந்தார்.
பிகேஆர் மீது வெறுப்படைந்து, இன்னும் அதிகமான உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து வெளியேறும் வாய்ப்பு உண்டு என்றும் சைட் அஷார் தெரிவித்தார்.
“இங்கு அனைவரும் நாற்காலிக்காக அடித்து கொள்கின்றனர். இதனைப் பார்த்தால், கிளந்தான் மாநிலத்தை நிர்வகிக்க பாஸ்-ஆல் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது,” என்றார் அவர்.