சாலே: பொய்ச் செய்திச் சட்டம் 1எம்டிபி விவாதத்தை ஒடுக்குவதற்கு அல்ல பொய்யான கூற்றுகளைத் தடுக்கத்தான்

தொடர்பு,  பல்லூடக     அமைச்சர்    சாலே    சைட்  கெருவாக்   பொய்ச்  செய்திகள்   தடுப்புச்   சட்டம்  1எம்டிபி  மீது விவாதங்கள்  நடப்பதைத்   தடுப்பதற்காகக்  கொண்டுவரப்பட்ட    சட்டம்   அல்ல    என்கிறார்.

“அது  உண்மையல்ல.  1எம்டிபி  குறித்து   விவாதிப்பதற்கோ   பேசுவதற்கோ   எந்தத்   தடையுமில்லை”,  என்றவர்   தம்  வலைப்பதிவில்   கூறினார்.

தவறான   தகவல்கள்  “செய்திகள்”  என்றும்  ”உண்மைகள்”   என்றும்     பரப்பப்படுவதுதான்  பிரச்னையாகும்  என்றார்.

“எடுத்துக்காட்டுக்கு,  1எம்டிபியில்  ரிம42  பில்லியன்  ‘மாயமாக  மறைந்தது’   என்ற  ‘செய்தி’  அதிகாரப்பூர்வமாக  விளக்கமளிக்கப்பட்டு   பொய்யென்று   நிறுவப்பட்ட  பின்னரும்   திரும்பத்  திரும்ப  எடுத்துரைக்கப்படுவதைக்   கேட்கிறோம்”,  என்றாரவர்.

பொய்யைத்  திரும்பத்   திரும்பச்  சொல்லிக்  கொண்டிருந்தால்  மக்கள்   அதை  உண்மை   என்று  நம்பி  விடுவார்கள்   என்பதை    சாலே   சுட்டிக்காட்டினார்.

“பொய்ச்  செய்தி   என்ற  நோயால்  மலேசியா  மட்டுமல்ல,   உலகே  பாதிக்கப்பட்டுள்ளது”,  என்றாரவர்.