தேர்தல் ஆணையத்தின் மோசடி அறிக்கைக்கு எதிராகப் பெர்சே ஆர்ப்பாட்டம்

 

நியாயமான, நேர்மையான மற்றும் தூய்மையான தேர்தலுக்காகப் போராடும் அமைப்பான பெர்சே தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதி எல்லை மறுசீரமைப்பு அறிக்கைக்கு எதிரான போராட்டத்தில் இன்று நாடாளுமன்றத்தில் களமிறங்கியது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை பிரதமர் நஜிப் ரசாக் இன்று காலை மணி 11.30 அளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் பெர்சே அரசாங்கத்திற்கு சாதகமாக வரையப்பட்டிருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிக்கைக்கு எதிரான மக்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.

காலை மணி 8 லிருந்து பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்கள் துகு நெகாராவில் கூடுகின்றனர். அதே நேரத்தில், அம்னோவின் சுங்கை பெசார் தொகுதி தலைவர் ஜமால் முகமட் யுனுஸ் அவரது சிவப்புச் சட்டையினரை பெர்சே ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக களமிறக்கப் போவதாக கூறியுள்ளார்.

எந்தத் தரப்பின் போராட்டத்திற்கும் போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு போலீசார் நாடாளுமன்றத்திற்கு வெளியில் இருப்பார்கள்.

அம்பிகா: அனுமதிக்கக்கூடாது

பெர்சேயின் முன்னாள் தலைவர் அம்பிகா, இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கையையும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட போலியான செய்தி மசோதா 2018 யையும் கட்டாயமாக எதிர்க்க வேண்டும் என்றார்.

“நாம் அவற்றை அனுமதிக்கக்கூடாது. மக்கள் மட்டுமே அவை குறித்து ஏதேனும் கூறலாம். ஏன் அவர்கள் அந்தத் தேர்தல் ஆணையத்தின் அறிக்கை மீது அவசரம் காட்டுகிறார்கள்”, என்று கேட்டார்.

“இன்று, நாம் கூறுவதை கேட்க வைக்க வேண்டும். இது நமது உரிமைகள் பற்றியது, மக்களின் உரிமைகள். வாக்களிக்கும் உரிமை! இந்த அறிக்கையின் வழி, அவர்கள் இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு சவால் விடுகின்றனர்”, என்று அம்பிகா கூறினார்.

பெர்சேயின் போராட்டம் அமைதியானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அடுத்து பேசிய மரியா சின் அப்துல்லா, “இசிக்கு (தேர்தல் ஆணையம்) ஒரு வேலை இருக்கிறது. ஆனால், அவர்கள் ஏமாற்றுபவர்கள்”, என்றார்.

நாம் அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏனென்றால் நாம் இந்த நாட்டை நேசிக்கிறோம். நாம் இன்று அதிக அளவில் இங்கு கூடியிருக்கிறோம் ஏனென்றால் நாம் அமைதி, நீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை விரும்புகிறோம் என்று மரியா கூறினார்.

துகு நெகாரா

இங்கு 300 க்கு மேற்பட்டவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் பேரணியில் செல்லவோ நடக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

காலை மணி 7 லிருந்து நாடாளுமன்றத்திற்குச் செல்லும் இரு வழிகளையும் போலீசார் மூடி விட்டனர். உள்ளே செல்லும் ஒவ்வொரு வண்டியையும் சோதனை செய்தனர்.

ஆனாலும், நாடாளுமன்றத்தின் இரும்புக் கதவுகளிலிருந்து 400 மீட்டர் தூரத்தில் சில பெர்சே ஆதரவாளர்கள் உட்கார்ந்திருந்தனர்.

பாடாங் மெர்போக்கைச் சுற்றியும் பல பெர்சே ஆதரவாளர்கள் காணப்பட்டனர்.

பெர்சேயின் வழிகாட்டி குழு உறுப்பினர் யாப் சுவி வெங் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் 10 பிரதிநிதிகள் மட்டும் நாடாளுமன்றத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கூட்டத்திலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். “தங்காப்” என்று கத்தினர். யாப் அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

அதே நேரத்தில், அங்கு ஒருசில அம்னோ சிவப்புச் சட்டையினரும் காணப்பட்டனர்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில்

இருக்கும் இடத்தை விட்டு நகரக் கூடாது என்று போலீசார் உத்தரவிட்டிருந்த போதிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் தடுப்புகளைத் தாண்டி நாடாளுமன்றத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை தடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் அவர்களுக்கு முன்னால் இருந்தனர்.

நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் “திருடனைப் பிடியுங்கள்” மற்றும் “அறிக்கையை நிராகரியுங்கள்” என்று முழங்கிக் கொண்டு சென்றனர்.

மணி 11.15 அளவில், சுமார் 400 ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குச் செல்லும் பாலத்தை அடைந்தனர். அவர்களுடன் பெர்சேயின் ஆட்சேபக் கடிதத்தை நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் அளிப்பதற்கான குழுவும் உடன் சென்றது.

நாடாளுமன்ற வளாகத்தை சென்றடடைந்த ஆர்ப்பாட்டக்கள் அனைவரும் சாலையின் ஒரு பக்கத்தில் அமந்தனர். அவர்களிடம் பேசிய பெர்சே அலுவலக உறுப்பினர் மண்டீப் சிங் நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா பெர்சேயின் மகஜரை அவரே நேரடியாகப் பெற்றுக்கொள்வார் என்று தெரிவித்தார். இன்னொரு ஆர்வலர் ஹிசாமுடின் ராயிஸ் மகஜர் கொடுப்பதைப் பார்ப்பதற்கு வசதியாக இருப்பதற்கு அனைவரையும் அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பெர்சேயின் மகஜரை மக்களவையின் தலைவரிடம் கொடுப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் எண்மரை மட்டுமே போலீசார் அனுமதித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பெர்சேயின் பிரதிநிதிகள் அவர்களின் மகஜரை வெற்றிகரகமாக மக்களவைத் தலைவரின் பிரதிநிதியிடம் அளித்தனர்.

இதன் பின்னர், போலீசார் கூட்டத்தினரை கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். கூட்டம் அமைதியாகக் கலைந்து சென்றது.