தீவகற்ப மலேசியாவுக்கான இறுதி தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆளும் கட்சிக்குச் சாதகமான முறையில் தேர்தல் தொகுதிகளை நிர்ணயம் செய்துள்ள அந்த அறிக்கை 14வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிக்கு வழிகோலுவதாகக் கருதப்படுகிறது.
அறிக்கைக்கு மக்களவையின் ஒப்புதலைப் பெறுவது ஒரு பிரச்னையாக இருக்காது. நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கும் பரிந்துரை எதுவும் அதில் இல்லையென்பதால் ஒரு சாதாரண பெரும்பான்மையுடன் அதை நிறைவேற்றி விடலாம்.
சிலாங்கூரின் தேர்தல் தொகுதிகள்தாம் பெரும்பாலும் மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளன. இந்த மாற்றங்களின் பயனாக பிஎன் ஹரப்பானிடமிருந்தும் பாஸிடமிருந்தும் ஏழு இடங்களைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஜோக், கிள்ளான் துறைமுகம், செமந்தா, மொரிப், சீலாட் கிளாங், சிஜாங்காங், டுசுன் துவா ஆகியவையே அவ்வேழுமாகும்.
புதிய மாற்றங்களால் சிலாங்கூரில் பிஎன்னுக்குள்ள இடங்கள் 12-இலிருந்து 19ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசைக் கைப்பற்ற இது போதுமானதல்ல. அதற்கு இன்னும் ஏழு இடங்கள் தேவைப்படும்.
பக்கத்தான் ரக்யாட்டில் பங்காளிக் கட்சியாக இருந்த பாஸ், இப்போது பக்கத்தான் ஹரப்பானில் இல்லை என்பதும் 14வது பொதுத் தேர்தலில் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
பிஎன்னையும் ஹரப்பானையும் எதிர்க்கப் போவதாக பாஸ் சூளுரைத்துள்ளது.
பாஸின் இழப்பை பெர்சத்துவை வைத்து ஈடுகட்ட நினைக்கிறது ஹரப்பான்.
பெர்சத்து ஆதரவாளர்கள் பெர்சத்துவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அதை வெற்றிபெற வைப்பதுடன் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும் அக்கட்சிகளை அவர்கள் ஆதரிக்க வேண்டும். இல்லையேல் சிலாங்கூரில் தொங்கு சட்டமன்றம் என்ற நிலை ஏற்பட்டு விடலாம்.