போலியான செய்தி தடை மசோதா 2018 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

 

பிரதமர் துறை அமைச்சர் அஸலினா ஓத்மான் சைட் இன்று நாடாளுமன்றத்தில் போலியான செய்தி தடை வரைவு மசோதா 2018 -ஐ நாடாளுமனறத்தில் இரண்டாவது வாசிப்புக்காக தாக்கல் செய்தார்.

தற்போது அமலில் இருக்கும் சட்டங்கள், தேசநிந்தனைச் சட்டம் 1948 மற்றும் தொடர்புகள் மற்றும் பல்லூடக சட்டம் 1998 உட்பட, போலியான செய்திகளால் ஏற்படும் விளைவுகளைக் கையாள்வதற்கு போதுமானதாக இல்லை என்ற புத்ரா ஜெயாவின் நிலைப்பாட்டை அமைச்சர் மீண்டும் கூறினார்.

அவற்றில், காணமல் போன எம்எச்370 விமானம் குறித்த பல போலியான செய்திகளை அமைச்சர் எடுத்துக்காட்டாக கூறினார். அச்செய்திகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அடைந்த பெருந்துன்பங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

மெக்டோனல்ட் பர்கரில் பன்றி இறைச்சி கலந்திருப்பது பற்றிய போலியான செய்தி பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மசோதா அவைக் குழு அளவில் விவாதிக்கப்படும் போது பல திருத்தங்கள் செய்யப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

செக்சன் 4 இல் இருக்கும் “தெரிந்தே” என்ற சொல் “தீய எண்ணத்துடன்” என்ற சொல்லுக்கு மாற்றப்படும் என்றாரவர்.

அதிகபட்ச சிறைதண்டனை 10 ஆண்டிலிருந்து ஆறு ஆண்டிற்கு குறைக்கப்பட்டுள்ள வேளையில், முன்மொழியப்பட்டுள்ள ரிம500,000 அபராதம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.