அம்னோ மூத்த தலைவர் ஒருவர், நாடாளுமன்றத்தில் “go to hell”(செத்துப் போ) போன்ற இழிவான சொல்களைப் பயன்படுத்துவோரை நாடாளுமன்றத் தலைவர் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“நாட்டின் உன்னத கழகமான நாடாளுமன்றத்தில் மரியாதைக் குறைவான சொல்களும் ‘செத்துப் போ’ ‘செலாகா’ போன்ற ஒருவரை இழிவுபடுத்தும் சொல்களும் பயன்படுத்தப்படுவதை அவைத் தலைவர் தடுத்து நிறுத்த வேண்டும்.
“நேற்று நாகரிகமற்ற மொழி பயன்படுத்தப்பட்டது நம் இனத்தையே கேவலப்படுத்தி விட்டது.
“இது தடுக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்”, என்று முன்னாள் அமைச்சரான ரயிஸ் யாத்திம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
யாருடைய பெயரையும் ரயிஸ் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் அம்னோவின் பாசிர் சாலாக் எம்பி தாஜுடின் அப்துல் ரஹ்மானைத்தான் சுட்டுகிறார் என்பது தெளிவு. அவர்தான் நேற்று நாடாளுமன்றத்தில் பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுமீது அனல்பறக்கும் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது எதிரணியினரைப் பார்த்து “Go to hell with you!” என்று கத்தினார்.
பெர்சத்து பாகோ எம்பி முகைதின் யாசின் பேசிக்கொண்டிருந்தபோது ரஹமான் குறுக்கிட்டதற்காக எதிரணியினர் அவரை நோக்கிக் கூச்சலிட பதிலுக்கு ரஹ்மான் அவர்களைப் பார்த்து அப்படிக் கத்தினார்.