2013 பொதுத் தேர்தல் முடிந்த சில மாதங்களுக்குப் பிறகு, அப்போதையத் துணைப் பிரதமரான முஹைடின் யாசின், பொருள், சேவை வரியைக் (ஜி.எஸ்.டி) காட்டி, மக்களைப் பயமுறுத்துவதாக பல எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறை கூறினார்.
ஏப்ரல் 1, 2015 முதல் ஜி.எஸ்.டி செயல்படுத்தப்பட்டது. 14-வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகிவரும், பக்காத்தான் ஹராப்பான் தலைவரான முஹைட்டின், மூன்று ஆண்டுகால அமலாக்கத்திற்குப் பின்னர், ஜி.எஸ்.டி. எதிர்ப்பு பேரணியில் இன்று இணைந்தார்.
இன்று மாலை, 4.30 மணியளவில் ‘சோகோ’ பேரங்காடிக்கு வந்த முஹைட்டினைச் சுமார் 50 பங்கேற்பாளர்கள் வரவேற்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் பெர்சத்துவின் அடையாள வண்ணமான ‘சிவப்பு’ சட்டைகளை அணிந்திருந்தனர்; ‘ஜி.எஸ்.டி.-யைப் புறக்கணிப்போம்’ எனும் சுலோகங்கள் அடங்கியப் பதாகைகளையும் அட்டைகளையும் ஏந்தி அவர்கள் கோஷமிட்டனர்.
ஒரு சுருக்கமான உரையை வழங்கிய பின்னர், முஹைட்டின் சோகோவிற்குள் நுழைந்தார், இதனால் அவரது பாதுகாப்புப் படையினரும் போலிசாரும் அதிர்ச்சியடைந்தனர்.
5 நிமிடங்கள் கழித்து, பங்கேற்பாளர்களுடன் இணைந்து ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
பங்கேற்பாளர்கள் ‘துரூன் நஜிப்’ (நஜிப் பதவியில் இருந்து இறங்கு) என்றும் ‘உண்டி ஹராப்பான்’ (ஹராப்பானுக்கு வாக்களியுங்கள்) என்றும் முழங்கினர். ஆனால், முஹைடின் கோஷமிடவில்லை.
பங்கேற்பாளர்கள் ஜி.எஸ்.டி. எதிர்ப்புத் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர். பலர் அதனைப் பெற்றுகொண்டபோதும், நடுத்தர வயது பெண் ஒருவர் இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு, இந்த எதிர்ப்புப் பேரணி ‘கால விரயம்’ என்றும் கூறினார்.
அப்பேரணி, மாலை சுமார் 5 மணியளவில் மாஜு ஜங்சன் பேரங்காடியின் முன் நிறைவடைந்தது.