நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இரண்டாவது நாளாக 2018 பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுமீதான விவாதத்தைத் தொடர்கிறார்கள்.
அச்சட்ட வரைவை இரண்டாவது வாசிப்புக்குக்காக பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அச்சட்ட வரைவுமீது குழு நிலையில் விவாதம் நடைபெறும்போது சில மாற்றங்கள் செய்யப்படும் என்பதையும் அஸலினா மக்களவைக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.
மற்றவற்றோடு சட்டவரைவு பிரிவு 4-இல் .”தெரிந்தே” என்ற சொல்லுக்குப் பதிலாக ”தீய எண்ணத்துடன்” என்ற சொல் பயன்படுத்தப்படும் என்றார்.
சிறைத் தண்டனையும் பத்தாண்டுகளிலிருந்து ஆறாண்டுகளாகக் குறைக்கப்படுகிறது. ஆனால், ரிம500,000 தண்டம் குறைக்கப்படாது.
விமர்சகர்கள் அச்சட்டம் விரிவானது என்றும் அது நாட்டில் கருத்துச் சொல்லும் உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்றும் குறைகூறியுள்ளனர்.
அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுவதை மறுக்கும் அரசாங்கம், தேசிய நலன் காக்கவும் பொய்ச் செய்திகளால் பாதிக்கப்படுவோர் நலன்காக்கவுமே அது கொண்டுவரப்பட்டது என்கிறது.