கொம்பாஸ் நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் 24 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளதாக அது வெளியிட்டுள்ள கட்டுரை மீது பிரபலமான இந்தோனிசிய நாளேடான கொம்பாஸ் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தத் தகவலை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

“முழுக்க முழுக்கப் பொய்களும் ஜோடனைகளும் நிறைந்த தமது அண்மைய கட்டுரைக்காக இந்தோனிசிய பத்திரிக்கையான கொம்பாஸ் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது”, என அவரது டிவிட்டர் தகவல் குறிப்பிட்டது.

ஆனால் அந்தத் தகவலை கொம்பாஸ் பத்திரிக்கையிடமிருந்தோ பிரதமர் அலுவலகத்திலிருந்தோ மலேசியாகினி உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால் அம்னோ இளைஞர் தலைவர் பொய் சொல்வதாகத் தெரிவித்த அன்வார் இப்ராஹிமின் பத்திரிக்கைச் செயலாளர் எக்மால் அகமட், கொம்பாஸ் மன்னிப்புக் கோரும் செய்தியை வெளியிடவில்லை என்றார்.

அதற்குப் பதில் பிரதமரை பேட்டி காண்பதற்கு மட்டுமே அது முன் வந்துள்ளதாக அவர் தமது டிவிட்டர் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொம்பாஸ் உண்மையில் அது ஆகஸ்ட் 4ம் தேதி வெளியிட்ட கட்டுரை தொடர்பில் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதாக பெர்னாமா கூறியுள்ளது.

அந்த நாளேட்டின் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியீட்டில் கொம்பாஸ் பத்திரிக்கையாளர் ஜிம்மி எஸ் ஹரியாந்தோ எழுதியுள்ள கட்டுரையின் 10ம் பக்கத்தில் 10வது பத்தியில் மன்னிப்புக் கோருவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.