பாஸ் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொய்ச் செய்தித் தடுப்புச் சட்டவரைவுக்கு ஆதரவு கொடுத்ததன்வழி அம்னோவுடன் ஒத்துழைப்பது தெளிவாகத் தெரிகிறது.
அப்படிச் செய்ததன்வழி அந்த இஸ்லாமிய கட்சி அம்னோ தலைவர்களின் தவறான செயல்களைத் “தற்காக்க” உதவுவதோடு மட்டுமின்றி பாஸ் தலைமையில் செயல்படும் அரசு மற்றும் அதன் தலைவர்களின் குறைபாடுகளை மூடிமறைக்கவும் முற்பட்டுள்ளதாக அமனா இளைஞர் துணைத் தலைவர் ஃபயிஸ் ஃபாட்சில் கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் மட்டும் பாஸ் ஆட்சி செய்து வருகிறது.
“அம்னோ மற்றும் பிஎன் களவாணி அரசாங்கம் புதிதாகக் கொண்டு வந்துள்ள சட்டம், மக்களின் பேச்சுரிமையை, குறிப்பாக எதிரணித் தலைவர்களும் ஊடகங்களும் அரசாங்கத்தின் குறைபாடுகள் பற்றிய உண்மைச் செய்திகள் வெளியிடுவதைத் தடுக்கிறது என்பதால் ஒரு கொடிய சட்டமாகப் பார்க்கப்படுகிறது.
“இது அரசாங்கத் தலைவர்களின் ஊழல்களையும் தவறான நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமாகத் தெரிகிறது”, என்றாரவர்.
அச்சட்டவரைவு நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது அங்கிருந்த 11 பாஸ் எம்பிகளும் அதற்கு ஆதரவு தெரிவித்ததை ஃபயிஸ் சாடினார்.