ஜோகூர் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர் என்று கூறப்படுவதை ஜோகூர் டிஏபி உதவி விளம்பரச் செயலாளர் ஷேக் ஒமார் அலி மறுதலித்தார்.
“ஜோகூரில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் (மந்திரி புசார் பதவிக்கு) என்னிலும் தகுதிவாய்ந்த, முத்த தலைவர்கள் உள்ளனர்”, என ஷேக் ஒமார் ஓர் அறிக்கையில் கூறினார்.
பெர்சத்து தலைவர் முகைதின் யாசின், அமனா துணைத் தலைவர் சலாஹுடின் முகம்மட் சாலே, ஜோகூர் அமனா தலைவர் அமினுல்ஹூடா ஹசான், ஜோகூர் பிகேஆர் தலைவர் ஹசான் கரிம் போன்றோர் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“அவர்கள் ஜோகூர் மந்திரி புசாராவதற்கு என்னிலும் தகுதி வாய்ந்தவர்கள். அவர்களோடு என்னை ஒப்பிடுவதா, அவர்கள் எங்கே, நான் எங்கே.
“டிஏபி மந்திரி புசார் பதவிக்கு ஆசைப்படுகிறது என்று கூறுவது மலாய்க்காரர்களைப் பயமுறுத்த கையாளப்படும் ஒரு பழைய தந்திரம்”, என்றாரவர்.
ஹராகா டெய்லியில் அரசியல் ஆய்வாளர் கமருல் ஜமான் எழுதிய கட்டுரைக்கு ஷேக் ஒமார் இவ்வாறு எதிர்வினை ஆற்றியிருந்தார்.