உங்கள் கருத்து: இரும்புப் பெண்மணியைக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர் நஸ்ரியும் அனுவாரும்

நஸ்ரி,  அனுவாருக்கு  ரபிடா  கண்டனம் , பிரச்னைகளில்  கவனம்  செலுத்த  அறிவுறுத்து

ஆர்ஆர்:  கண்ணாடி  வீட்டில்  இருப்போர்  கல்லெறியக்  கூடாது.  சுற்றுலா, பண்பாட்டு   அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசிசும்  அம்னோ    தகவல்   தலைவர்  அனுவார்   மூசாவும்   முன்னாள்  அனைத்துலக  வாணிக,  தொழில்     அமைச்சர்  ரபிடா   அசிசைக்  குறைத்து   மதிப்பிட்டு   விட்டனர்.

அம்னோவுக்குள்  நிகழும்  இந்த  வசைமாறியால்  ஒன்றுமறியா  மலாய்க்காரர்கள்  குழம்பிப்போய்   திக்குதிசை  தெரியாமல்   தடுமாறிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள்   நாட்டுக்காக  14வது  பொதுத்   தேர்தலில்   சரியான  முடிவெடுக்கும்  ஒரு   தெளிவைப்  பெற   வேண்டும்.

பெயரிலி 242641505703475:  இரும்புப்  பெண்மணி  ரபிடா   அசிசுக்குப்   பாராட்டுகள்.  அவ்விரு  பேர்வழிகளுக்கும்  சரியான  சூடு  கொடுத்திருக்கிறீர்கள்.

ஆம். பிரச்னைகளில்தான்  கவனம்   செலுத்த   வேண்டுமே   தவிர,   தனிப்பட்ட   ஆளுமைகள்மீது  அல்ல. கவனத்தைத்   திசை  திருப்ப   கோடீஸ்வரர்   ரோபர்ட்  குவோக்மீது   கண்டனக்  கணை  பாய்ச்சப்பட்டது.  அது  திரும்பி   வந்து    இவர்களையே   தாக்கியது.

ரபிடாவையும்   அரசாங்கச்  சிறப்பு  ஆலோசகர்  ரயிஸ்   யாத்திமையும்   தாக்குவதன்  மூலம்   ஏற்பட்ட   பாதிப்புகளைச்  சரிசெய்துவிட  முடியாது.  அதற்கான  காலம்   கடந்து   விட்டது.  அவர்கள்   பாரம்பரியத்தில்  ஊறிப்போன  அரசியல்வாதிகள்.  வெட்கக்கேடு    என்றால்   என்னவென்பதை   அறிந்தவர்கள்.

1எம்டிபி-யுடன்   தொடர்புடைய   பணமோசடிகளால்   நாட்டின்  மானம்   வெளிநாடுகளில்  பறிபோகிறது.  தவறு  எதுவும்  நிகழவில்லை    என்றால்   அமெரிக்க  நீதித் துறை(டிஓஜே),  சிங்கப்பூர்,  சுவிட்சர்லாந்து   ஆகியவற்றுக்கு   எதிராக   நடவடிக்கை   எடுக்க வேண்டியதுதானே.

உங்கள்  பெயரையும்  காப்பாற்றிக்  கொள்ளுங்கள்,  நாட்டின்  பெயரையும்  காத்துக்கொள்ளுங்கள்.

ரிக்  தியோ:  ரபிடா  சொல்வது   சரியே.  தனிப்பட்ட  முறையில்  தாக்குவது   நல்லதல்ல.  பிரச்னைகளை  அறிவுபூர்வமாக  விவாதியுங்கள். வயதைப்  பற்றிப்  பேசுவது   என்றால்   நஸ்ரியும்  அனுவாரும்கூட   வயோதிகம்   என்ற நிலையை  அடையத்தான்    போகிறார்கள்.

மற்றவற்றை  ஒதுக்கிவிட்டு   பிரச்னைகளில்  மட்டும்  கவனம்   செலுத்துங்கள்.

ரூபிஸ்டார்4037:  ஆட்சியில்   இருப்பவர்கள்   பொய்ச்   செய்தி  பொய்ச்   செய்தி   என்று  பல்லவி  பாடிக்கொண்டிருக்கும்    வேளையில்   ரபிடா  மட்டும்தான்   உண்மை  பேசுகிறார்.

இரும்புப் பெண்மணிக்குப்  பாராட்டுகள்.

ஜேவாய்:  ரபிடாமீது  நான்  வைத்துள்ள   மதிப்பு  பன்மடங்கு   உயர்ந்து  விட்டது.  எல்லா  முன்னாள்   தலைவர்களையும்   கேட்டுக்கொள்கிறோம்-  மக்களுக்காகக்  குரல்  கொடுக்க   வாரீர்.

ஆட்சியில்  தொடர்ந்து   இருப்பதற்காக  தன்னிடமுள்ள   வளங்கள்  மொத்தத்தையும்    தவறாகப்    பயன்படுத்தி    மக்களின்  வாய்க்குப்  பூட்டுப்போட  முனையும்   ஊழல்   நிர்வாகத்துக்கு   எதிராகக்  குரல்  கொடுப்பீர்.

டபல்யு321: இரும்புப்  பெண்மணி  1969-இல்  மலாயாப்  பல்கலைக்கழகத்தில்  எனக்குப்  பொருளாதார  விரிவுரையாளர்.

இன்றும்  அவரின்   அறிவின்  கூர்மை   அப்படியேதான்  உள்ளது.  அபத்தப்  பேச்சு   பேசிக்கொண்டிருந்த   அமைச்சர்கள்  இருவருக்கும்   சரியான  சூடு  கொடுத்து   சொல்ல  வேண்டியதைச்  சரியாகச்  சொல்லியிருக்கிறார்  ரபிடா.

பக்கத்தான்  ஹரப்பான்   அதன்  கிராமப்புற   செராமாக்களில்   பேச  இவரை  அழைத்துச்   செல்ல   வேண்டும்.    ஆற்றல்மிக்கப்  பேச்சாளர்.

அலிசோங்வேலு:  முன்னாள்   பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்   படைகளுக்குத்   தலைமையேற்று   போர்க்களம்   ஏகியுள்ளார்.  அவருடன்  சேர்ந்துகொள்ள  ரபிடாவும்  ரயிசும்   முன்வந்துள்ளனர்.

மற்றவர்கள்    எங்கே? உங்கள்  சேவை   நாட்டுக்குத்   தேவை.  அடுத்த   தலைமுறைக்கு   நாட்டைப்  பத்திரமாகப் பாதுகாத்துக்  கொடுக்க  முன்வாரீர்.