பக்கத்தான் ஆட்சிக்கு வந்ததும் பொய்ச் செய்தி சட்டம் அகற்றப்படும், மகாதிர் கூறுகிறார்

 

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியில் அமர்ந்ததும் பொய்ச் செய்தி சட்டத்தை அகற்றும். அத்துடன், வாக்குறுதியளித்துள்ளபடி இதர கொடூரச் சட்டங்களும் நீக்கப்படும்.

நாடாளுமன்ற மேளவையில் இன்னும் நிலுவையிலிருக்கும் பொய்ச் செய்தி தடை மசோதா 2018 மற்றும் கடந்த வாரம் அரசாங்க கெஜெட்டில் பதிவு செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் தேர்தல் எல்லை மறுசீரமைப்பு அறிக்கை ஆகியவை நாடாளுமன்றத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறுகிறார்.

மாறாக, அது (மறுசீரமைப்பு அறிக்கை) இரண்டு மணி நேரத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆக, நாடாளுமன்றம் நாடகமன்றமாகி விட்டது. அங்கு மக்களை விவாதிக்க அனுமதிப்பதற்கான அக்கறையோ விருப்பமோ இல்லை என்றாரவர்.

“அவர்கள் இவ்வாறு எல்லை மறுசீரமைப்பு அறிக்கை மற்றும் பொய்ச் செய்தி சட்டம் ஆகியவற்ற ஏற்றுக்கொண்டுள்ளனர். நாங்கள் அரசாங்கத்தை அமைத்ததும் இச்சட்டங்களையும் மக்களைக் கொடுமைப்படுத்தும் இதரச் சட்டங்களையும் ஒழிப்போம் அல்லது நீக்குவோம் என்பது எங்களது நிலைப்பாடு”, என்று நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவரின் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மகாதிர் கூறினார்.