தேர்தல் போஸ்டர்களில் மகாதிரின் படம் இருக்கக்கூடாது, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

 

பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் போஸ்டர்களில் மகாதிரின் படங்கள் அக்கூட்டணியின் தலைவர் என்றோ அக்கூட்டணி தேர்வு செய்துள்ள பிரதமர் வேட்பாளர் என்றோ போடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் தம்மிடம் இதைத் தெரிவித்ததாக டிஎபி அமைப்புக்குழு தலைவர் அந்தோனி லோக் கூறினார். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் போட்டியிடும் கட்சித் தலைவரின் படங்கள் மடடுமே போடலாம்.

ரோஸ் இன்னும் ஹரப்பானை ஓர் அரசியல் கூட்டணி என்று முறையாகப் பதிவு செய்யாமல் இருப்பதுதான் இதற்கு காரணம் என்றாரவர்.

தேசிய அளவில் எங்களுடைய போஸ்டர்களில் மகாதிரை எங்களுடைய எதிர்கால பிரதமர் என்று காட்டலாமா என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவர்கள் முடியாது என்று கூறியதாக தெரிவித்த அந்தோனி லோக், அதற்கான காரணம் ஹரப்பான் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்பதாகும் என்றார்.

“ஆக, ஹரப்பாரன் தலைவர் தேர்தல் போஸ்டர்களிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்”, என்று அந்தோனி லோக் மேலும் கூறினார்.