நஜிப்புக்கு இப்போது அவரது சொந்த இராணுவம் இருக்கிறது, மகாதிர் சாடினார்

 

பிரதமருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று இராணுவப் படைகளின் தளபதி ராஜா முகமட் அபாண்டி ராஜா முகமட் நோர் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து நஜிப்புக்கு இப்போது அவருக்குச் சொந்தமான இராணுவம் இருக்கிறது என்று ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட் சாடினார்.

இது ஒரு ஏமாற்றமளிக்கும் வளர்ச்சி, ஏனெனில் இராணுவமும் போலீஸ் படையும் மன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.

இது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, அதன்படி இராணுவப் படைகள் மன்னருக்கும் நாட்டிற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நமது இராணுவ வீரர்கள் நஜிபுக்கும் அரசாங்கத்திற்கும் விசுவாசமாக இருப்பதைக் காண்கிறோம் என்று மகாதிர் கூறினார்.

இதன் பொருள் என்னவென்றால், இப்போது அவருக்கு சொந்தமான இராணுவத்தை நஜிப் வைத்திருக்கிறார் என்று நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடந்த பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்ற கூட்டத்திற்குப் பின்னர் மகாதிர் செயதியாளர்களிடம் கூறினார்.

கடந்த வாரம், இராணுவம் மற்றும் போலீஸ் ஆகியவற்றுக்கான ஒரு விருந்து நிகழ்ச்சியில் பேசிய ராஜா முகமட் அபாண்டி பாதுகாப்பு படைகள் மீது நஜிப் எப்போதும் சிறப்பான கவனம் செலுத்தி வந்துள்ளர் என்றும் அவர்கள் பங்கிற்கு அவர்கள் நன்றியும் விசுவாசமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

“இதனை மனதில் கொண்டு, படையினரும் அமைதியின் பாதுகாப்பாளர்களுமான நாம், நமக்குக் கிடைத்த அனுகூலங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பதை உணர வேண்டும்” என்று கூறிய ராஜா அபாண்டி, “இதை நாம் நமது நாட்டிற்கும் பிரதமர் தலைமையிலாயான அரசாங்கத்திற்கும் காட்டும் பிளவுப்படாத விசுவாசத்தின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்”, என்றார்.