பூகிஸ் மாவீரர் எங்கே தம்முடன் விவாதத்திற்கு வந்துவிடுவாரோ என்ற வியப்பில் இருக்கிறார் “பயந்தாங்கொள்ளி” மகாதிர்

 

பிரதமர் நஜிப்பைக் கண்டு தாம் அஞ்சுவதாக ஹரப்பான் தலைவர் மகாதிர் ஏளனமாகக் கூறினார். ஆனால் அந்த “பூகிஸ் மாவீரர்” தம்முடன் விவாதம் நடத்துவதற்கான துணிச்சல் உடையவரா என்று அவர் வியந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பூகிஸ் மாவீரருக்கு எதிராகச் சவால் விட வேண்டாம் என்று அவரது எதிர்ப்பாளர்களுக்கு நஜிப் விடுத்திருந்த எச்சரிக்கைக்கு எதிர்வினையாற்றிய மகாதிர் இவ்வாறு கூறினார். நஜிப் பூகிஸ் வம்சாவளி சார்ந்தவர்.

“அவர் எவருடனும் சண்டையிடும் துணிச்சல் கொண்டிருக்கிறார். அதனால்தான் நான் ஆட்டம் கண்டிருப்பதோடு மிகவும் பயந்துபோய் இருக்கிறேன்.

“‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்ற இன்னொரு நிகழ்ச்சியில் அவர் என்னுடன் விவாதிக்க விரும்பினாலன்றி, நான் அவரைச் சந்திக்கத் துணியமாட்டேன்.

“உம்மைக் கண்டு பயப்படும் இந்த மனிதரை தயவு செய்து வந்து சந்திக்க வேண்டும்”, என்று மகாதிர் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்றிரவு பதிவு செய்துள்ளார்.

‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற கலந்துரையாடலில் பங்கேற்குமாறு மகாதிர் விடுக்கும் மூன்றாவது அழைப்பு இதுவாகும்.