அமனா தலைவர் முகம்மட் சாபு சரவாக்குக்குள் நுழைவதினின்றும் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் இப்படித் தடுக்கப்பட்டது இது முதல்முறை அல்ல.
“அங்கு கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காலை மணி 9.30க்கு கூச்சிங் விமான நிலையம் வந்தடைந்த அவரைக் குடிநுழைவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்”, என முகம்மட் சாபுவின் அரசியல் செயலாளர் முகம்மட் அஸ்கார் மாட் டாலி ஓர் அறிக்கையில் கூறினார்.
மாட் சாபு என்ற பிரபலமாக விளங்கும் முகம்மட் கடந்த வாரம் பிந்துலுவில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள வந்தபோது அவர் தடுக்கப்படவில்லை என அஸ்கார் கூறினார்.
ஆனால், 2016 மார்ச் மாதம் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அது மாநிலத் தேர்தல் நடைபெறவிருந்த நேரம்.
அப்போது அவர் தடுக்கப்பட்டதற்குக் காரணம் எதுவும் கூறப்படவில்லை.
மாட் சாபு என்றில்லை, சரவாக் செல்ல தடை விதிக்கப்பட்டவர் பட்டியலில் பலர் இடம்பெற்றுள்ளனர். பிகேஆர் உதவித் தலைவர்கள் நூருல் இஸ்ஸா, தியான் சுவா, பிகேஆர் மகளிர் தலைவர் சுரைடா கமருடின், டிஏபி சீபூத்தே எம்பி தெரேசா கொக், சர்ச்சைக்குரிய சமயப் பிரச்சாகர் ரிதுவான் டீ அப்துல்லா, சிவப்புச் சட்டைகள் தலைவரும் சுங்கை புசார் அம்னோ தலைவருமான ஜமால் முகம்மட் யூனுஸ், சமூக ஆர்வலர் அம்பிகா ஸ்ரீநிவாசன் போன்றோர் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.