பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் மலாய் சுனாமி சாத்தியமானதுதான், ஆனால் 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க, மலாய்க்காரர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என ‘இல்ஹாம்’ நிர்வாக இயக்குநர் ஹிசோமுடின் பாக்கார் கூறியுள்ளார்.
டாக்டர் மகாதீர் ‘உணர்வலை’ குறித்து கருத்துரைத்த அவர், வாக்களிக்க வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதை, குறிப்பாக கிழக்கு கரையோர வாக்காளர்களை உறுதிசெய்வது எளிதல்ல என்று விளக்கினார்.
“85% இலக்கு, ஒரு நியாயமான இலக்கு என்று நான் நினைக்கிறேன், மலாய் சுனாமி என்பது, பெரும்பான்மையான மலாய் வாக்காளர்கள் வாக்களிக்க வந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
“இப்போது பிரச்சனை வாக்காளர்களை இணங்க வைப்பது, குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள், கிழக்குக் கடற்கரையில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு அல்லது கிளந்தானுக்கு வாக்களிக்க செல்ல வேண்டும், அப்படி நடந்தால்தான், மலாய் சுனாமி ஏற்படும்.
“பிரச்சனை என்னவென்றால், வாக்காளர்களில் பலர் இன்னும் தங்கள் சொந்த ஊர் முகவரிகளைப் பயன்படுத்துகின்றனர், ஆக வாக்களிக்க வீடு திரும்ப, இவர்களுக்கு அடிப்படையில் நிதி வளமும் அரசியல் ஈடுபாடும் தேவை,” என்றார் ஹிசோமுடின்.
ஜிஇ14-ல், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றிபெற, மலாய் சுனாமி, 85 விழுக்காடு மலாய்க்காரர்களின் வாக்குகள் தேவை என அக்கூட்டணியின் தலைவர் மகாதிர் நேற்று கூறியிருந்தார்.
“அதிகமானோர் வாக்களிக்க வரவேண்டும், 85 விழுக்காட்டிற்கும் குறையாமல். 13- வது பொதுத் தேர்தலில் காட்டப்பட்டுள்ளது போல், இது அடையக்கூடிய இலக்கு,” என்று மகாதிர் தன் வலைபதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளார்.
மகாதிர் சொற்பொழிகளில் அவரின் ‘பரம் இரசிகர்கள்’
கடந்த மார்ச் 2017 முதல் மார்ச் 2018 வரையில், பெர்சத்து தலைவரின் சொற்பொழிவுகளைக் கேட்க திரண்ட கூட்டத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளதாகவும் ஹிசோமுடின் கூறினார்.
அவர்களில் பெரும்பான்மையினர், ‘பரம இரசிகர்கள்’ என்பதால் பக்காத்தான் ஹராப்பானுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
“அவர்கள் அனைவரும் ஹராப்பானுக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதியல்ல என்று சிலர் வாதிடலாம், நானும் அதனை ஆமோதிக்கிறேன்.
“இருப்பினும், வருகையாளர்களை நாம் பார்க்க வேண்டும், அவர்கள் பணம் கொடுத்து திரட்டப்பட்டவர்கள் அல்ல; ஹராப்பானின் உறுப்பினர்களும் அல்ல. மகாதிர் சொற்பொழிவைக் கேட்க வருபவர்கள் ‘பரம இரசிகர்கள்’, இவர்கள் ஹராப்பானுக்கு வாக்களிக்கக் கூடும்,” என்று அவர் விளக்கினார்.
சுனாமியின் வேகம் போதுமானதாக இல்லை
இதற்கிடையில், மலாயாப் பல்கலைக்கழகக் கல்வித்துறை பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் அவாங் பாவி, ஏற்கனவே மலாய் சுனாமி ஒரு சிறிய அலையாக ஏற்பட்டுவிட்டது, ஆனாலும் அதன் வேகம் பாரிசான் நேசனலுக்குள் இடையூறு ஏற்படுத்த போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
ஆயினும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, பிரச்சாரங்கள் துவங்கும் போது, அதன் உண்மையான வேகத்தை நாம் பார்க்கக்கூடும் என்று அவர் கூறினார்.
“சுனாமி ஏற்பட வேண்டுமானால், மலாய்க்காரர்கள் அதிக கோபமாக இருக்க வேண்டும். தற்போதைய அலை பிரச்சனைகள் ஏற்படுத்த போதுமானதாக இல்லை.
மகாதிர் சொற்பொழிவுகளில் அதிகரித்து வரும் மக்கள் எண்ணிக்கை, அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகள் திரள்வதற்கான அறிகுறி என்ற ஹிசோமுடின் கூற்றையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பி40 பிரிவினரை ஹராப்பான் கவரவேண்டும்
“சொற்பொழிவுகளில் கூடிவரும் மக்கள் எண்ணிக்கை ஒரு நல்ல அறிகுறி. அதனால்தான், ஓர் அதிருப்தி அலை உருவாகிவிட்டது என நான் சொன்னேன். ஆனால், பெரும்பான்மை வாக்காளர்களான பி40 வர்க்கத்தினர், நாட்டின் தேசியப் பிரச்சினைகள் பற்றி கவலைப்படுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
“பக்காத்தான் ஹராப்பான் அவர்களைச் சமாளித்து, எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் வகையில் ஈர்க்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றார் அவர்.
இவ்வாரம் வெள்ளிக்கிழமை, பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தைக் கலைத்து, பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பெரித்தா டெய்லி