பக்காத்தான் ஹராப்பான் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்தியர்கள் நலன் குறித்த சிறப்பு திட்டங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை, ஏப்ரல் 5 ஆம் தேதி, மாலை 5.00 மணிக்குப் பெட்டாலிங் ஜெயா சிவிக் மையத்தில் நடைபெறுவதால் அனைவரும் திரண்டு வந்து கலந்து கொள்ளும்படி பக்காத்தான் ஹராப்பானை பிரதிநிதித்து அழைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தேநீர் விருந்துடன் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசீசா, பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், அமான தலைவர் மாட் சாபூ மற்றும் பக்காத்தானின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அதன் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள்.
துன் மகாதீர் இந்தியர்களுக்கான சிறப்பு தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரை நிகழ்த்தும் இந்நிகழ்ச்சியில் பக்கத்தான் கூட்டணிக் கட்சிகளின் இதர தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் உரை நிகழ்த்துவார்கள்.
மலேசியாவின் 14 பொதுத் தேர்தலுக்குப் பின் இந்நாட்டின் மத்திய அரசாங்கத்தை வழி நடத்த மக்கள் தங்களுக்கு வாய்ப்பு வழங்கினால், நாட்டில் நல்ல பல மாற்றங்களுக்குத் திட்டங்களைத் தேர்தல் வாக்குறுதிகளாக வழங்கியுள்ள பக்காத்தான் ஹராப்பான், அதே போன்ற ஒரு சிறப்பு திட்டத்தை இந்தியச் சமுதாய மேம்பாட்டுக்கும் வடிவமைத்துச் செயல்படுத்திடச் சித்தமாக உள்ளது என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்
இன்றைய பாரிசான் அரசாங்கத்தால் இந்தியச் சமுதாயம் நீண்ட நாட்களாகக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நலன் போன்று பற்பல துறைகளில் ஓரங்கட்டப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இந்த நாட்டின் மேம்பாட்டில் இந்தியர்கள் தொடர்ந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம், அவர்களைப் பாதிக்கும் 25 முக்கிய அம்சங்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் வாக்குறுதிகளைப் பக்காத்தான் ஹராப்பான் வழங்குகிறது.
அதேவேளையில், மக்கள் அனைவரும் ஒரே தேசமாகப் பயணிக்க, எல்லா இனங்களுக்கும் சரிசம வாய்ப்புகள் வழங்கி அனைவரையும் தேச நிர்மாணிப்பில் பங்களிப்பைச் செய்திட வைப்பதே நமது நீண்டகால இலட்சியம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
இன்றைய அரசாங்கத்தின் கண்மூடித்தனத்தால் நம் நாடு மிக இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. நமது தேசத்தின் மீட்சிக்கான சக்தியும், அதிகாரமும் மக்கள் கைகளில்தான் உள்ளன என்பதை யாவரும் அறிவோம். நாம் அனைவரும் நாட்டுக்காக, நம் மக்களின் நல்வாழ்வுக்காக ஒன்றுபட்டு உன்னத முடிவினை எடுப்பதற்கான தக்க தருணமாகும் இது என்றார் அவர்.
அதனால், பக்காத்தான் ஹராப்பான் மத்திய அரசாங்கத்தை அமைக்க, இந்தியச் சமுதாயத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்த, எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் முழு ஆதரவையும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று டாக்டர் சேவியர் கேட்டுக்கொண்டார்.
பாக்காத்தான் ஹரப்பானின் மேம்பாட்டு திட்டங்கள் தேசியமுன்னணியின் திட்டங்கள் போல் அறிக்கையுடன் தூக்கிபோடப்படாமல் செயல் படுமா என்பது காலம் தான் பதில் சொல்லும்– இருந்தாலும் நமக்கு வேறு என்ன வழி? இந்த முறை ஆட்சி இவர்களின் கைக்கு மாறுமா? சந்தேகமே– நம்பிக்கை நாயகனின் கையூட்டு வேலை மிக பிரமாதமாக நடைபெறுகிறது. மலேசியர்கள் எந்த அளவுக்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அதுவும் அதிக உழைப்பில்லாமல் இவ்வளவுஆண்டுகள் சுகம் கண்டு இன்புற்றிருந்தவர்கள் எப்படி மாறுவார்கள்?
“காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் பார்த்திருந்தேன்
பார்த்திருந்த காலமெல்லாம்
பழம்போல் கனிந்ததம்மா”
இவர்கள் அறிக்கையைக் கண்டால் இப்படிதான் பாட தோன்றுகின்றது. இப்படி எத்தனை தேர்தல் வாக்குறுதிகள் வந்து போயிருக்கும்? இந்தியர் ஏழ்மை தீர்ந்தபாடில்லை. எல்லாம் இனிப்பு கலந்த மிட்டாய் போன்று இனிய தேர்த்தல் வாக்குறுதிகள்தாம் என்பதில் ஐயமில்லை.
இந்தியர்களுக்கு அரசாங்கம் உண்மையிலேயே உதவ வேண்டுமாயின் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு ஓர் அரசாங்க வேலையிலோ அல்லது அரசாங்கம் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலையில் அமர்த்த திட்டம் ஏதும் உள்ளதா?
ஏழ்மை நிலையில் உள்ள இந்தியருக்கு மலிவு விலை கட்டித்தரும் திட்டம் ஏதும் உள்ளதா?
ஏழ்மை நிலையில் உள்ள இந்திய குடும்ப மாணவருக்கு நகரங்களில் தங்கிப் படிக்க தங்கும் வசதி கொண்ட விடுதிகள் கட்டிக் கொடுக்கப்படுமா? அல்லது தங்கும் விடுதி கொண்ட இடை நிலைப் பள்ளிகளில் இந்திய மாணவர்களை அதிகமாக சேர்க்க திட்டம்தான் உண்டா?
இவையெல்லாம் இல்லையென்றால் எந்த அரசாங்க திட்டத்தாலும் ஏழை இந்தியருக்கு எந்த பயனும் வரப் போவதில்லை.
‘செடிக்’ திட்டமும் மேற்கூறிய வகையில் உதவி செய்ய இயலாது போனதால் அந்த திட்டமும் பயனில்லாமல் போனது உண்மையே.