பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சி, சங்கங்கள் சட்டம் 14 (5) கீழ் தற்காலிகமாக கலைக்கப்படுவதாக, சங்கங்கள் பதிவு இலாகா (ஆர்.ஓ.எஸ்.) அறிவித்துள்ளது.
அந்த அறிவுறுத்தல் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ரோஸ்-இன் தலைமை இயக்குநர் சூரயாத்தி இப்ராஹிம், இன்று புத்ராஜெயாவில் உள்ள ரோஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் இதனை அறிவித்தார்.
மார்ச் இறுதிக்குள், ரோஸ் கோரிய அனைத்து ஆவணங்களையும் கட்சி சமர்ப்பித்துவிட்டதாக பெர்சத்து கூறுகிறது.
மாறாக, கூடுதல் ஆவணங்களைக் கூட மார்ச் 29-ம் தேதியன்று பெர்சத்துவின் ஏற்பாட்டு செயலாளர் கேப்டன் (பி), முகமது சுஹாய்மி யஹ்யா அனுப்பிவிட்டார்.
2016-ல் உருவாக்கப்பட்ட, அம்னோவில் இருந்து பிளவுபட்ட அக்கட்சி, கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அதன் ஆண்டு பொதுக் கூட்டத்தில் ரோஸ்-உடன் பிரச்சினைகளை எதிர்கொண்டது.
கிளைகள் மற்றும் தொகுதிகளின் கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன், தேசியப் பொதுக் கூட்டம் எவ்வாறு நடைபெற்றது என்பதற்கான ஒரு கேள்வி உள்ளது.
பிப்ரவரியில், பெர்சத்து தலைவர் முஹைடின் யாசின், பெர்சத்து சட்டவிதியில், கிளை நிறுவப்பட்ட ஒரு வருடத்திற்கு பிறகுதான் ஆண்டு பொதுக் கூட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்திருந்தார்.