நாளை நாடாளுமன்றம் கலைக்கப்படும், நஜிப் அறிவிப்பு

14-வது பொதுத்தேர்தலுக்கு வழிவிடும் வகையில், மலேசிய நாடாளுமன்றம் நாளை, சனிக்கிழமை கலைக்கப்படும் எனப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.

பேரரசர், சுல்தான் முஹம்மட் V-ன் ஒப்புதலைப் பெற்ற பின்னர், புத்ராஜெயாவில் இன்று, மதியம் 12 மணியளவில், ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் நஜிப்.

நாளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து, 60 நாள்களுக்குள் 14-வது பொதுத்தேர்தல் அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையின் இறுதி கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர், நஜிப் இந்த அறிவிப்பைச் செய்தார். அவருடன் துணைப் பிரதமரும் மற்ற அமைச்சர்களும் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மாநிலச் சட்டமன்றங்களையும் கலைத்து, மாநில பொதுத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த, மாநிலச் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களிடம் அனுமதி கேட்குமாறு மந்திரி பெசார்களுக்கும் முதல்வர்களுக்கும் ஆலோசனை வழங்கினார்.

சரவாக் மாநிலம் கடந்த 2016, மே 7-ம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியதால், அம்மாநிலத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

3 ஏப்ரல், 2009-ல், துன் அப்துல்லா அஹ்மட் படாவியிடமிருந்து பிரதமர் பதவி பொறுப்பேற்ற பிறகு, பி.என். தேர்தல் இயந்திரத்திற்கு நஜிப் இரண்டாவது முறையாகத் தலைமையேற்கிறார்.

2017-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டின் கணக்குப்படி, எதிர்வரும் பொதுத் தேர்தலில், 14.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.