டாக்டர் மகாதிர் பிகேஆர் உறுப்பினராகாமல் அதன் சின்னத்தைப் பயன்படுத்துவது எப்படி?

பக்கத்தான்  ஹரப்பான்  தலைவர்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்,     14வது  பொதுத்   தேர்தலில்  பிகேஆரின்  “கண்”   சின்னத்தையே   கூட்டணியில்   உள்ள   எல்லாக்  கட்சிகளும்     பயன்படுத்தும்   என    நேற்றிரவு    அறிவித்தார்.

ஒரு  பொதுவான  சின்னத்தில்  போட்டியிடுவது   அக்கூட்டணி   ஒன்றுபட்டிருப்பதைக்  காண்பிக்கும்,   அத்துடன்  மகாதிரின்  பெர்சத்து   கட்சி  தற்காலிகமாக  பதிவு  இரத்து   செய்யப்பட்டிருந்தாலும்    அதன்   உறுப்பினர்கள்   தேர்தலில்  போட்டியிட  அது   ஒரு தடையாகவும்  இருக்காது.

பெர்சத்துவும்   ஹரப்பானில்  உள்ள  மற்ற  கட்சிகளின்   உறுப்பினர்களும்  பிகேஆரின்  சின்னத்தில்   போட்டியிட   அக்கட்ச  வேண்டிய   அவசியமுமில்லை.

முன்னாள்  பெர்சே  தலைவர்  மரியா  சின்கூட  பிகேஆர்  உறுப்பினர்  அல்ல  ஆனாலும்   அவர்  பிகேஆர்  சின்னத்தில்தான்  ஹரப்பான்  வேட்பாளராக  போட்டியிடுகிறார். பிகேஆரின்  சின்னத்தைப்  பயன்படுத்தத்   தேவையானதெல்லாம்   அக்கட்சியின்  அதிகாரப்பூரவ  அனுமதிக்  கடிதம்   மட்டுமே.

ஒரு  கட்சி   அதன்   உறுப்பினர்   அல்லாத   வேட்பாளருக்கு   இப்படி  அனுமதிக்  கடிதங்கள்  வழங்குவது   வழக்கத்துக்கு  மாறானதல்ல.

பிஎஸ்எம்  கட்சியின்  டாக்டர்   மைக்கல்   ஜெயகுமார்    பிகேஆர்  சின்னத்தைப்  பயன்படுத்திப்  பல   தேர்தல்களில்   போட்டியிட்டிருக்கிறார்.

2013-இல்   சுற்றுசூழல்    ஆர்வலர்   வொங்  தாக்  டிஏபி  சின்னத்தில்   மசீச   தலைவர்   லியோ  தியோங்   லாயை    எதிர்த்துப்   போட்டியிட்டார்.

பிஎன்னும்கூட   சரவாக்கில்  இந்த   உத்தியைப்   பயன்படுத்தியது  உண்டு.