சரவாக் தவிர்த்து மற்ற மாநிலங்களின் சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்த பின்னரே தேர்தல் ஆணையம் (இசி) 14வது பொதுத் தேர்தலுக்கான நாளை நிர்ணயிக்கும்.
இதைத் தெரிவித்த இசி தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா இன்று பிற்பகல்வரை நான்கு சட்டமன்றங்கள்- பெர்லிஸ், மலாக்கா, நெகிரி செம்பிலான், ஜோகூர்- மட்டுமே முறைப்படி கலைக்கப்பட்டுள்ளன என்றார்.
நேற்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து இது நிகழ்ந்தது.
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும் பேரரசரின் கடிதம் ஏப்ரல் 6-இல் இசிக்கு வந்தது. மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவும் அதை முறைப்படி தெரிவித்தார்.
“ஆனால், எல்லா மாநிலச் சட்டமன்றத் தலைவர்களிடமிருந்தும் சட்டமன்றம் கலைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் அறிவிக்கைகள் கிடைக்கப் பெறவில்லை”, என முகம்மட் ஹாஷிம் புத்ரா ஜெயாவில் இசி தலைமையகத்தில் தெரிவித்தார்.
“எல்லா அறிவிக்கைகளும் கிடைக்கப் பெற்ற பின்னரே பொதுத் தேர்தல் பற்றி விவாதிக்கும் சிறப்புக் கூட்டத்துக்கு நாள் குறிக்கப்படும்”, என்றாரவர்.
அக்கூட்டத்துக்குப் பின்னரே வேட்புமனு தாக்கல் நாள், வாக்களிப்பு நாள் ஆகியவை அறிவிக்கப்படும்.