டிஏபி மூத்தத் தலைவரும் அதன் நிறுவனர்களில் ஒருவருமான சென் மான் ஹின் அக்கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவதை ஆதரிக்கிறார்.
டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக்கின் விளக்கத்தைக் கேட்ட பின்னர் “மேலும் சிறந்த மலேசியாவுக்காக”த்தான் அவ்வாறு செய்யப்படுகிறது என்பதை அறிந்து சென் அதை ஆதரிப்பதாக கட்டைவிரலை உயர்த்திக்காட்டும் காணொளி ஒன்று முகநூலில் பதிவாகி இருந்தது.
நேற்று சின் சியு டெய்லியில் டிஏபி அதன் ராக்கெட் சின்னத்தை விட்டு பிகேஆரின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதை சென் ஆதரிக்கவில்லை என்று கூறும் செய்தி ஒன்று வெளிவந்திருந்தது.
“மலேசிய மக்களுக்கு, வரும் பொதுத் தேர்தல் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். டிஏபி ஒரு கூட்டணியில் இடம்பெற்றுள்ளது, எல்லாரும் ஒரே நோக்கத்திற்காகத்தான் போராடுகிறார்கள்.
“மசீசவும் மற்றவர்களும் டிஏபி அதன் ‘ராக்கெட்” சின்னத்தைக் கைவிட்டிருப்பதாகக் கூறுவதைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள். அப்படியெல்லாம் இல்லை. ராக்கெட்டும் இருக்கும், மற்ற கட்சிகளின் சின்னங்களும் இருக்கும்.
“அரசியலில் சில வேளைகளில், நண்பர்களை ஒன்றுதிரட்டி மக்களிடம் நாங்கள் வெவ்வேறு சின்னங்களைக் கொண்டிருந்தாலும் எங்களின் நோக்கம் ஒன்றுதான்- முன்னிலும் சிறந்த மலேசியாவை உருவாக்குவதே அது- என்பதைக் கூற வேண்டியுள்ளது”, என்று சென் தெரிவித்தார்.