பிஎன் 220 பக்க தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்

 

பாரிசான் நேசனலின் தேர்தல் அறிக்கையை இன்றிரவு புக்கிட் ஜாலில் அரங்கில் பாரிசான் நேசனல் தலைவர் நஜிப் ரசாக் வெளியிட்டார். 220 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 364 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில் வாழ்க்கைச் செலவினம், பொருளாதாரம் மற்றும் கல்வி போன்ற பொதுவான விவகாரங்கள இடம்பெற்றுள்ள வேளையில், இதர பல தரப்பினரின் தேவைகள் பற்றிய சிறப்புப் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் இராணுவம் மற்றும் போலீஸ் படையினர் மற்றும் பெண்கள் பகுதிகளும் அடங்கும்.

புக்கிட் ஜாலில் அரங்கம் முழுவதும் பாரிசான் ஆதரவாளர்கள் நிரம்பி இருந்தனர். அக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நஜிப், பாரிசானின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் பெண்களைப் பற்றி குறிப்பிட்டார்.

“நாங்கள் பெண்களை இந்த நாட்டின், அரசாங்கத்தின் மற்றும் நிச்சயமாக பிஎன்னின் முதுகெலும்பாகக் கருதுகிறோம்”, என்று நஜிப் கூறினார்.

தேர்தல் அறிக்கை வீட்டு வசதிகள் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான மிக விரிவான நடவடிக்கைகள் பற்றி கூறுகிறது.

பிஎன் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது நஜிப் பக்கத்தான் ஹரப்பான் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பற்றியும் குறிப்பிட்டார்.

நாங்கள் மூன்று மில்லியன் வேலைகளை உருவாக்க வாக்குறுதி அளிக்கிறோம். எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்க வாக்குறுதி அளித்துள்ளனர். அது மிகக் குறைவானது. பிஎன் மூன்று மில்லியனுக்கு வாக்குறுதி அளிக்கிறது என்று நஜிப் மேலும் கூறினார்.

பிரதமர் நஜிப்புடன் இதர பிஎன் உயர்மட்ட தலைவர்களும் மாநில தலைவர்களும் உடனிருந்தனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட இன்றைய தினத்தில் பிஎன் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.

பொதுத் தேர்தல் 60 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும்.