தேர்தலில் போட்டிபோடும் ஒருவருக்கு பிஎம்ஆர்வரைதான் படிப்பு என்பது பெரிய கல்வித் தகுதி அல்ல என்பதைச் சரக்குந்து ஓட்டுநர் சண்முகம் ஒப்புக்கொள்கிறார்.
ஆனாலும் பார்டி சோசியலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) அவரைத்தான் தனது போர்ட் கிள்ளான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளது.
தன் தம்பியைப் படிக்க வைக்க தன் குடும்பத்தார் படும் சிரமத்தைப் பார்த்த பின்னர் படிப்பை நிறுத்திவிட்டு பதின்ம வயதிலேயே வேலை செய்யத் தொடங்கி விட்டார் சண்முகம்.
பல வேலைகளைச் செய்தார். கடைசியாக இவர் செய்தது சரக்குந்து ஓட்டுநர் வேலை.
“ஆறாண்டுகள் அந்த வேலையைச் செய்தேன். உடம்புக்கு முடியாவிட்டால்கூட வேலை செய்ய வேண்டும். சில நேரங்களில் 30, 40 பெட்டிகளை ஏற்றிச் செல்ல வேண்டியிருக்கும். உதவியாளர் இல்லை என்றால் நாம்தான் அவற்றை ஏற்றி இறக்க வேண்டியிருக்கும்”, என்று சண்முகம் மலேசியாகினியிடம் கூறினார்.
கடுமையான வேலை. நேரம் காலம் பார்க்காமல் அவரும் அவரின் சகாக்களும் வேலை செய்தனர். ஆனால், அதற்கான ஊதியம் கொடுக்கப்படவில்லை. அது பற்றிக் கேட்டதற்கு வேலையிலிருந்து தூக்கப்பட்டார்.
ஆனால், சண்முகம் விடுவதாக இல்லை. வேலை பார்த்த நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்தார். அப்போதுதான் பிஎஸ்எம் பற்றிக் கேள்விப்பட்டார்.
“பிஎஸ்எம் எங்குள்ளது என்பதுகூட தெரியாது. கட்சியில் யாரையும் தெரியாது. ஆனாலும் அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்களும் உதவினார்கள்”, என்றார்.
அவர்களின் உதவும் மனப்பான்மையால் கவரப்பட்டவராய் 2014-இல் கட்சியில் உறுப்பினரானார். படிப்படியாக போர்ட் கிள்ளான், கிள்ளான் இரண்டுக்கும் தொகுதித் தலைவரானார். கடந்த அக்டோபரில் ஜிஇ14 வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
சரி , இவருக்கு வெற்றிவாய்ப்பு எப்படி? பெரிய படிப்பில்லை, பணபலம் இல்லை என்றாலும் நம்பிக்கையுடன் உள்ளார் சண்முகம். மக்கள் இப்போது பிஎன் அள்ளிக்கொடுக்கும் இலவசங்களைத் தாண்டி பார்க்கத் தொடங்கி விட்டனர். பிகேஆர்மீது மக்களுக்கு ஏற்கனவே வெறுப்பு உள்ளது.
இரண்டு முறை பிகேஆர் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து இருவருமே ஓராண்டுக்குப் பின்னர் கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர்.
நடப்பு சட்டமன்ற உறுப்பினர் காலிட் இப்ராகிம் மந்திரி புசார் நெருக்கடி வந்ததை அடுத்து 2014-இல் பிகேஆரிலிருந்து விலகினார். இப்போது அவர் ஒரு சுயேச்சை.
அவருக்கு முன்பு 2008-இல், பிகேஆரின் பட்ருல் ஹிஷாம் அங்கு வெற்றி பெற்றார். அதன்பின்னர் அவரும் ஓராண்டுதான் பிகேஆரில் இருந்தார். 2009-இல் கட்சியிலிருந்து வெளியேறினார். இப்போது பிகேஆர் அங்கு மறுபடியும் போட்டியிடுகிறது.
“டாக்டர்கள் வழக்குரைஞர்கள்தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில்லை.
“தேர்தலில் போட்டியிடும் உரிமை எல்லாருக்குமே உண்டு. சரக்குந்து ஓட்டுநரா, விவசாயியா என்பது ஒரு பொருட்டல்ல மக்களுக்காகப் போராடும் துணிச்சல் இருக்க வேண்டும்”, என்று சண்முகம் கூறினார்.
“அரசியலில் குதிக்கும் முன்னர் எல்லாக் கட்சிகளும் ஒன்றுதான் என்று நினைத்திருந்தேன். வருவார்கள், வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால், நிறைவேற்றுவதில்லை. அதனால் அதில் சேரும் எண்ணம் வந்ததில்லை.
“ஆனால், பிஎஸ்எம் அரசியல் வேறு மாதிரியாக இருந்தது. களத்தில் இறங்கி மக்களுக்கு உதவுகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடுகிறார்கள்”, என்றார்.
“போர்ட் கிளாங் மக்களுக்குத் தேவை அவர்களுக்காக உண்மையிலேயே உதவக்கூடிய ஒருவர் , அவர்களுக்காக துணிச்சலாக குரல் கொடுக்கக் கூடியவர். தேர்தல் நெருங்கி வரும்போது மட்டும் வந்து சார்டின், அரிசி, சமையல் எண்ணெய் கொடுப்பவர் அல்ல.
“மக்கள் பிஎஸ்எம் பற்றி அறிந்தால் 80 விழுக்காட்டினர் எங்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்”, என்று சண்முகம் கூறினார்.
ஓட்டைப் பிரிக்கும் நோக்கில் பி.எஸ்.எம். போட்டியிட்டால் எதிர்காலத்தில் அக்கட்சிக்கு இருக்கும் நன்மதிப்பு ஒழிந்து விடும். சிறிய கட்சியாக இருந்து கொண்டு தனக்கு வாய்ப்பு உள்ள தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டால் பயன் உண்டு. இல்லையேல், வைப்புத் தொகையையும் இழக்க நேரிடும்.