சற்றுமுன், ஜனநாயக செயற்கட்சி (டிஏபி), 14-வது பொதுத் தேர்தலில் பஹாங்கில் போட்டியிடவிருக்கும் தனது 3 மலாய் வேட்பாளர்களை அறிவித்தது.
பஹாங் மாநிலச் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவரும் மெந்தகாப் சட்டமன்ற உறுப்பினருமான தெங்கு சுல்பூரி ஷா பின் ராஜா பூஜி, ரவூப் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார்.
மசீச துணைத் தலைவர், ச்யூ மெ ஃபன்-ஐ எதிர்த்து, தெங்கு சுல்பூரி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூலாவ் மானிஸ் சட்டமன்றத்தில் அபு பாக்கார் லெபாய் சுடின் போட்டியிடவுள்ளார். கடந்த 13-வது பொதுத் தேர்தலில், 92 விழுக்காடு மலாய்க்கார வாக்காளர்களைக் கொண்ட அத்தொகுதியை அம்னோ 5,596 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது.
அவர்களோடு, ‘ராரா’ என்று அறியப்பட்ட யாங் ஷெஃபூரா ஒத்மான் கெட்டாரி சட்டமன்றத்தில் போட்டியிடவுள்ளார்.
இன்று பெந்தோங்கில் நடந்த ஒரு செராமாவில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் டிஏபி தலைவர் தான் கோக் வேய் ஆகியோர் இதனை அறிவித்தனர்.
சாபாய் சட்டமன்றத்தில் மீண்டும் ‘தமிழச்சி’ காமாட்சி
சுற்றுச்சூழல் ஆர்வலர் வோங் தாக், மசீச தலைவர் லியோ தியோங் லாய்க்கு எதிராக, இரண்டாவது முறையாக பெந்தோங்கில் போட்டியிடுவார் என்பதனையும் லிம் உறுதிப்படுத்தினார். கடந்த பொதுத் தேர்தலில், 379 வாக்குகள் வித்தியாசத்தில் வோங் தாக், லியோவிடம் தோல்வி கண்டார்.
“மலேசியாவை நாம் காப்பாற்ற விரும்பினால், பெந்தோங்கை நாம் வெல்ல வேண்டும், அப்போதுதான் நாம் பிஎன்-ஐ மாற்ற முடியும்,” என்றார் லிம்.
மேலும், கேமரன் மலை நாடாளுமன்றத்தில் எம்.மனோகரன் போட்டியிடவுள்ளதாகவும் லிம் அறிவித்தார். கடந்த பொதுத் தேர்தலில் 462 வாக்குகள் வித்தியாசத்தில், அப்போதைய மஇகா தேசியத் தலைவர் பழநிவேலுவிடம் அவர் தோல்வி கண்டார்.
இம்முறை கேமரன் மலையில் போட்டியிட, பாரிசான் உறுப்புக் கட்சிகளான மஇகா மற்றும் மைபிபிபி இரண்டும் முயற்சித்து வரும் வேளையில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் சுரேஸ்குமாரும் அங்கு களமிறங்க உள்ளார்.
இவர்களோடு, பஹாங் சட்டமன்றத்திற்குப் போட்டியிட உள்ள, மற்ற டிஏபி வேட்பாளர்களையும் லிம் அறிவித்தார்.
திரியாங்கில் லியோங் யூ முன், மெந்தகாப்பில் வூ சீ வான், சாபாயில் காமாட்சி, பிலுட்டில் லி சின் சென், த்ராஸ்-இல் சோவ் யூ ஹூய் மற்றும் தானா ராத்தாவில் சோங் யோக் கோங் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
பஹாங் மாநிலத்தில், இந்த ஆறு சட்டமன்றங்களிலும் தற்போது டிஏபி பதவி வகிக்கிறது.