14-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 28-ம் தேதி, சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. அதனை அடுத்து, வாக்களிக்கும் நாள் புதன்கிழமை, மே 9 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில், தேர்தல் ஆணையத் தலைமையகத்தில், அதன் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா இந்தத் தகவலை வெளியிட்டார்.
எனவே, ஜிஇ14-இன் பிரச்சாரக் காலம் 11 நாட்களாக அமைக்கப்பட்டுள்ளது. ஜிஇ13-உடன் ஒப்பிடும்போது, இம்முறை 4 நாள்கள் குறைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11-ம் தேதி, தேர்தல் நிர்வாக அலுவலர்களுக்கு (ஆர்ஓ) நியமன தினம் மற்றும் வாக்களிக்கும் நாளில் அவர்களின் கடமைகளை தெரிவிக்கும் தேர்தல் நீதிப்பேராணை வெளியிடப்படும்.
2017-ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், 14,940,624 வாக்காளர்கள் இந்த ஜிஇ14-இல் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என அறியப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல், பாரிசான், பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாஸ் ஆகியவற்றிற்கிடையே பெரியலவிலான மும்முனை மோதல்களைக் காணவுள்ளது.