ஒரு மனிதர் பிஎன் கொடிகளைப் பிடுங்கி எறியும் காட்சி 15-வினாடி காணொளியாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அது குறித்து புக்கிட் பிந்தாங் அம்னோ இளைஞர் பிரிவு டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக பிஎன் ஆதரவு பிரதிநிதிகள் மன்ற(பிஎன்பிபிசி) வலைத்தளம் கூறிற்று.
அச்சம்பவம் கோலாலும்பூரில் ஜாலான் சுல்தான் அப்துல் சமட்/ ஜாலான் துன் சம்பந்தன் 4-இல் நிகழ்ந்ததாக தெரிகிறது.
சின்மூட்டும் இத்தகைய செயல்கள் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கிவிடலாம் என புக்கிட் பிந்தாங் அம்னோ இளைஞர் தலைவர் ஜெப்ரி சைட் அபெண்டி எச்சரித்தார்.
“இது மீண்டும் நிகழாது என நம்புகிறேன். வாருங்கள் ஆரோக்கியமான முறையில் போட்டியிடுவோம்”, என்றாரவர்.
திங்கள்கிழமை தாமான் துன் இஸ்மாயிலில் ஒரு மனிதர் பிஎன் கொடிகளைப் பிடுங்கித் தரையில் வீசுவதைக் காண்பிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்ததாகவும் அது குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
அது குறித்து மூன்று புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக கோலாலும்பூர் போலீஸ் தலைவர் மஸ்லான் லாஸிம் தெரிவித்தார்.