லண்டனில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சரவாக் ரிபோர்ட் ஆசிரியர் கிளேர் ரியுகாசல்-பிரவ்னுக்கு எதிராகத் தொடர்ந்துள்ள வழக்கு ஏப்ரல் 30 லிருந்து மே 2 வையில் செவிமடுக்கப்படும். இது 14 ஆவது பொதுத் தேர்தல் பரப்புரை காலத்தில் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் ரியுகாசல் பிரவ்னுக்கு எதிரான அவதூறு வழக்கை ஹாடி பதிவு செய்தார். பாஸ் கட்சி பிரதமர் நஜிப்பிடமிருந்து ரிம90 மில்லியன் பெற்றதாக எழுதப்பட்டிருந்த கட்டுரை சம்பந்தப்பட்ட விவகாரம் பற்றியது அந்த வழக்கு.
அந்தக் கட்டுரையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்து ரியுகாசல் தம்மிடமோ வேறு யாரிடமோ விளக்கம் கோரவில்லை என்றும் அது குறித்து விளக்கம் அளிக்க ஒரு சந்தர்ப்பம்கூட அளிக்கவில்லை என்றும் ஹாடி அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்.
சரவாக் ரிபோர்ட்டின் ஏப்ரல் 3 அறிக்கைப்படி, ரியுகாசலின் தற்காப்பு வாதத்தில் பாஸ் தலைவர் ஹாடி சம்பந்தப்பட்ட 20 நிமிட ஆடியோ பதிவு முக்கியப் பங்காற்றும் என்று கூறப்பட்டுள்ளது.