ஜாஹிட் : முதலாளிகள் விடுமுறை கொடுக்கவில்லை என்றால், வாக்களிக்க வரவேண்டாம்

சிங்கப்பூரில் வசிக்கும் மலேசியர்கள், 14-வது பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்ல முதலாளிகளின் அனுமதியைப் பெற முடியவில்லை என்றால், வாக்களிக்க வரவேண்டாம் என்று தற்காலிக துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

மே 9-ல், விடுமுறை கிடைக்காத வெளிநாடுகளில் வேலை செய்யும் மலேசியத் தொழிலாளர்களைப் பற்றிய அவரது கருத்தைக் கேட்டபோது, அவர் அவ்வாறு சொன்னார்.

“என் கருத்துப்படி, அரசாங்கம் யாரையும் வாக்களிக்க ஊக்குவிக்கவும் இல்லை, தடுக்கவும் இல்லை, வாக்களிப்பது அவரவர் தனிப்பட்ட உரிமை.

“ஆனால், முதலாளி அனுமதிக்கவில்லை என்றால், வாக்களிக்கத் திரும்பாமல் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்,” என்று நேற்றிரவு, ஜொகூர், குளுவாங்கில் ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

ஜிஇ14-க்கான வாக்களிப்பு தேதியை, வேலை நாளில் தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததில் இருந்து, பலர் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் பணிபுரியும் மலேசியர்களை, வாக்களிக்க நாடு திரும்ப கோரி, சமூக வலைத்தளங்களில் பிரச்சார இயக்கங்கள் நடந்து வருகின்றன.

மலேசிய அரசாங்கம் பொது விடுமுறை அறிவித்துள்ள வேளை, சிங்கப்பூரில் இருக்கும் சில நிறுவனங்கள் மலேசியத் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க மறுத்துள்ளன.

இதற்கிடையே, தற்காலிக உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமத், எதிர்க்கட்சியினர், வெளிநாடுகளில் இருக்கும் வாக்காளர்களை நாடு திரும்ப ஊக்குவிக்க பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்.

வாக்களிக்கும் நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டியத் தேவையில்லை என்று அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.